அறிவுத்துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ள இவ் உலகில் சிறுவர் திருமணங்கள் பல நாடுகளில் காணபப்படுவதுடன், அத்தகைய திருமணங்களில் பல நீதிமன்ற படிகள் ஏறி விவாகரத்து வரை செல்வதையும் காணமுடிகிறது. வாழ்க்கைத் துணைகளில் ஒருவரோ அல்லது இருவரும் 18 வயதிற்கு குறைந்தவர்களாக இருந்து வரும் நிலையில் இரு நபர்களுக்கிடையில் இடம் பெறும் சட்டபூர்வமான அல்லது சடங்கு ரீதியான பந்தத்தினை வழங்குவதே சிறுவர் திருமணம் அல்லது இளவயது திருமணம் ஆகும். சிறுவர் திருமணமானது ஆண் பிள்ளைகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், பெண் பிள்ளைகளின் மீதே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் திருமணம் என்பவற்றின் மீது செல்வாக்குச் செலுத்துவதில் ஒரு நாட்டின் அபிவிருத்திக் குறிகாட்டிகளும், சமூக நல சேவை நிலைகளும் தாக்கம் செலுத்துகின்றன. குறிப்பாக இலங்கையில் சராசரி திருமண வயது தீவிரமாக அதிகரித்து வந்துள்ளது. 2006 ஆம் ஆண்டளவில் அனைத்து இனத்துவக் குழுக்களினதும் ஆண்களின் சராசரி திருமண வயது 27 – 28 வருடங்களாகவும், பெண்களது திருமண வயது 24- 25 வருடங்களாகவும் காணப்பட்டது. ஏனைய வசதிகளுடன் இணைந்த விதத்தில் நாட்டில் வாழ்ந்து வரும் அனைவருக்கும் சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி என்பவற்றை வழங்கும் அரசின் கொள்கைகள் காரணமாக இந் நிலைமை ஏற்பட்டிருந்தது.
தென்னாசியா சிறுவர் திருமண எண்ணிக்கையில் உயர் அளவுகளை கொண்டிருக்கும் அதேவேளைளில், இப் பிரச்சினையை கட்டுப்படுத்திக் கொள்வதில் வெற்றியும் கண்டுள்ளது. கிடைக்கும் புள்ளி விபரங்களின் பிரகாரம் 2005-2012 காலப்பகுதியில் இலங்கையில் 15 வயதிற்கு முன்னர் திருமணம் செய்யும் பிள்ளைகளின் எண்ணிக்கை 2 சதவீதமாக இருந்து வந்ததுடன், 18 வயதிற்குள் திருமணம் செய்து வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை 12 சதவீதமாக காணப்பட்டது என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் திருமணம் தொடர்பாக அறிக்கையிடுதல் மற்றும் தரவு சேகரிப்பு என்பவற்றில் பல முரண்பாடுகள் நிலவி வருகின்றன. குறைந்த வயது திருமணம் மற்றும் சேர்ந்து வாழ்தல் என்பன சுகாதார பராமரிப்பு மற்றும் சமூக நலனோம்பல் பணியாளர்களினால் ‘திருமணம்’ என ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு சில ஆய்வுகள் ‘பதிவு செய்யப்பட்ட குறைந்த வயது திருமணங்கள்’ தொடர்பான புள்ளிவிபரங்களை கொண்டுள்ளன. மேலும் வளரிளம் பருவம் என்ற பதத்திற்கு உலக சுகாதார ஸ்தாபனம் 15 தொடக்கம் 19 வரையிலான வயது என வரைவிலக்கணம் வழங்குவதுடன், வளரிளம் வயதுப்பிரிவினர் கருத்தரித்தல் தொடர்பான உலக சுகாதார தாபனத்தின் புள்ளி விபரங்கள் 18 மற்றும் 19 வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்களின் கருத்தரித்தல்களையும் உள்ளடக்குகின்றன. குடும்ப சுகாதாரப்பணியகம் இந்த வயது வரம்பினை 20 வருடங்களாக விரிவாக்கியிருக்கின்றது. இதன் விளைவாக ஒரு குழப்பநிலை தோன்றுகின்றது. எவ்வாறிருப்பினும், பொதுவாக 18 வயதிற்கு குறைந்தவர்கள் இளவயதினராக கருதப்படுகின்றனர்.
ஆராய்ச்சியின் பிரகாரம் கல்வி மட்டம், வசிக்கும் இடம் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் என்பன சிறுவர் திருமண வழமையின் மீது செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் நகரப் பிரதேசங்களிலும் பார்க்க கிராமப் பிரதேசங்களிலும், கல்விகற்ற குடும்பங்களிலும் பார்க்க கல்வியறிவு குறைந்த குடும்பங்களிலும் சிறுவர் திருமணங்கள் சாதாரணமாக இடம்பெற்று வருகின்றன. போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வசித்து வந்த குடும்பங்களுக்கு மத்தியில் சிறுவர் திருமணங்கள் சர்வ சாதாரணமாக இடம்பெற்று வந்தன.
இலங்கையில் பல்வேறு காரணங்களினால் சிறுவர் திருமணங்கள் இடம்பெற்று வருகின்றன. போர், நிதி மற்றும் உடல் ரீதியான பாதுகாப்பின்மை என்பன பொதுவான காரணங்களாக இனங்காணப்பட்டிருக்கும் அதே வேளையில், போருக்கு பிற்பட்ட காலப்பகுதியில் சிறுவர் திருமண வழமையை கலாசார ரீதியில் சகித்துக் கொள்ளும் ஒரு மனப் போக்கு தென்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். திரைப்படங்கள், தொடர் நாடகங்கள், இணையப் பாவனை எனப் பல்வேறு காரணங்களால் சிறுவர் திருமணங்கள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது என மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எஸ்.மனோகரன் தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் மோதல்களின் பின்விளைவாக சிறுவர் திருமணங்கள் இடம்பெற்று வந்துள்ளன. இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் போர் இடம்பெற்ற போது வடக்கையும், கிழக்கையும் சேர்ந்த பெற்றோர் தமது பிள்ளைகளை குறிப்பாக பெண் பிள்ளைகளை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதனை தவிர்க்கும் பொருட்டு அவர்களை இளவயதில் திருமணம் செய்து கொடுத்தனர்.
அத்துடன், குடும்பத்தின் சமூக கட்டமைப்பை சீர்குலைக்கும் விதத்தில் பல தடவைகள் இடம்பெற்ற இடப்பெயர்வுகள் சிறுவர் திருமணத்திற்கு பங்களிப்புச் செய்துள்ளன. இடப்பெயர்வினால் குடும்ப அலகின் சிதைவு மற்றும் சமூக கட்டுப்பாடுகள், விழுமியங்கள் மற்றும் வழக்காறுகள் என்பன பலவீனமடைந்தமை காரணமாக இடம்பெயர்ந்தோர் முகாம்களில் பல்வேறு சமூகங்களை சந்திக்கும் ஒரு புதிய கலாச்சாரத்தை இக்குடும்பங்கள் எதிர்கொள்ள நேரிட்டது. மேலும் கல்வி மற்றும் ஏனைய வாய்ப்புக்கள் என்பவற்றையும் அவர்களால் பெற்றுக் கொள்ள முடியாத நிலையும் நிலவி வந்தது. இந்தப் பின்னணியில் பாதுகாப்புக் கருதி தமது இளம் வயது பெண் பிள்ளைகளை திருமணம் செய்து வைப்பதற்கு பெற்றோர் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
இடம்பெயர்ந்து வாழும் முகாம்களில் பாதுகாப்புப் படையினரால் பாலியல் வன்முறை மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சமும், விபச்சாரம் மற்றும் பாலியல் சுரண்டலுக்கென பிள்ளைகளை வஞ்சகக் கடத்தல் செய்தல் என்பன குறித்த அச்சமும் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் சிறுவர் திருமணங்கள் நிகழ்வதற்கான ஒரு காரணமாக இருந்து வந்துள்ளது. குறைந்த வயது திருமணங்கள் போருக்குப் பிற்பட்ட இலங்கையின் பின்புலத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ஒரு போக்காக தென்படுகின்றது. இந்த தடுமாற்ற நிலைக்கு மேலும் பல காரணிகள் பங்களிப்புச் செய்கின்றன.
இடப்பெயர்வு காரணமாக சமூகம், கல்வி மற்றும் கலாச்சார கட்டமைப்புக்களின் சிதைவு மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த பெரும்பாலான குடும்பங்கள் தொடர்ந்தும் எதிர்கால திட்டமிடல்கள் இல்லாத நிலையில் பாதிக்கப்பட்ட மனநிலையில் தொடர்ந்தும் வாழ்ந்தும் வருகின்றனர். பெரும்பாலான பெற்றோர்கள் போர் இடம்பெற்ற காலப்பகுதியின் போது இளவயதில் திருமணம் செய்தவர்களாக இருந்து வருவதனாலும், அவர்கள் பாடசாலையில் இருந்து இடைவிலகியவர்களாக இருந்து வருவதனாலும் தமது பிள்ளைகளும் அதே போல் குறைந்த வயதில் திருமணம் செய்து கொள்வதற்கு எத்தகைய ஆட்சேபனையும் தெரிவிப்பதில்லை. திருமணத்தின் மூலம் சமூக அங்கீகாரம் கிடைப்பதினால் அவ்விதம் திருமணம் செய்து கொள்வதன் மூலம் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு உத்தரவாதப்படுகின்றது என பெற்றோர் கருதுகின்றனர். தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வேறு மாற்று வழியை கண்டறிய முடியாதவர்களாக அல்லது அவை குறித்து சிந்திக்க முடியாதவர்களாக அவர்கள் இருந்து வருகின்றனர்.
தாய்மார் வெளிநாடு சென்றதும் கணவன் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இத்தகைய பிரச்சனைகள் அந்த குடும்பத்தின் வாழ்க்கையையே மாற்றி விடுகின்றது. என்ன தான் பணத்தை சம்பாதித்தாலும் மீண்டும் வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியாத நிலையே இருக்கிறது. இவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்கிறார்கள். இங்கு கணவன்மார் போதைக்கு அடிமையாகிறார்கள். பலருடனான தவறான தொடர்பு, மறுமணம், சிறுவர் துஸ்பிரயோகம் என அவர்களது வாழ்க்கையும் சீரழிகின்றது. சிறுவர்களும் போதைப் பொருளக்கு அடிமையாகும் சந்தர்ப்பங்குளும் உருவாகுவதுடன், இளவயது திருமணங்கள், விவாகரத்துக்கள் என்பனவும் ஏற்படுகின்றது. இதனால் அவர்களது வாழ்க்கையும் பாழாகின்றது என வவுனியா தமிழ் பிரிவு கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராஜா தெரிவிக்கின்றார்.
போருக்குப் பின்னரான இலங்கையில் சிறுவர் திருமணத்தைத் தூண்டும் மற்றொரு வலுவான சக்தி வறுமையாகும். தமது சொந்த பொருளாதார சுமையை தணித்துக் கொள்ளும் நோக்கில் அல்லது இடமாற்றும் நோக்கில் பெற்றோர் தமது இளம் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இவற்றுடன் பெண் பிள்ளைகளுக்கும் ஆண் பிள்ளைகளுக்குமிடையில் ஏற்படும் காதல் தொடர்புகளும் இளவயது திருமணங்களை தூண்டியுள்ளது. குறிப்பாக பெண் பிள்ளைகளின் கௌரவத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக காதல் திருமணங்களுக்கு வயதினைக் கருத்தில் கொள்ளாது பெற்றோர் பச்சைக் கொடி காட்டிவிடுகின்றனர்.
வளரிளம் பதின்ம பருவத்தை சேர்ந்த பெண்கள் கருத்தரிக்கும் நிலை இலங்கையில் சிறுவர் திருமணத்தை தூண்டுவதற்கான மற்றொரு காரணமாக இருந்து வருகின்றது. வளரிளம் பருவத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் திருமணம் வரையில் தமது பாலுறவை ஒத்தி வைக்க வேண்டுமென பெற்றோர் எதிர்பார்த்த போதிலும் இன்றைய வளரிளம் பருவ இளைஞர் யுவதிகள் இது குறித்து வேறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளார்கள் என்பதை நடைபெறும் சம்பவங்கள் புலப்படுத்தி நிற்கின்றது. தொலைபேசிகள், இணையம் மற்றும் வீட்டுக்கு வெளியில் கண்காணிப்பின்றி நேரத்தை செலவிடுதல் (டியூஷன் வகுப்புகளுக்காக அல்லது வேலை செய்வதற்கென நீண்ட தூரம் பயணித்தல்) என்பன காரணமாக பதின்ம வயதினருக்கு மத்தியில் காதல் தொடர்புகளும், ஒரு சில சந்தர்ப்பங்களில் அவற்றையடுத்து ஓடிப்போதல் நிலைமையும் இடம்பெற்று வருவதுடன், அவை பதின்ம வயதுப் பிரிவினருக்கு மத்தியில் இடம்பெறும் பாலுறவு சம்பவங்களையும் அதிகரித்துள்ளன. திருமணத்திற்கு வெளியில் இடம்பெறும் பாலுறவை சமூகம் கண்டனம் செய்யும் காரணத்தினால் குறித்த சோடிகள் திருமணம் செய்து கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும், சம்பிரதாயபூர்வமாக திருமணம் செய்தவர்களாக தம்மை காட்டிக் கொள்ள முன்வருபவர்களாகவும் உள்ளனர். ஆனால், இது போன்ற பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அந்த சோடியோ அல்லது பெற்றோரோ திருமணம் குறித்து சிந்தித்துப் பார்ப்பது கூட இல்லை.
பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் குறித்த புரிந்துணர்வு திருமணத்திற்கு வரையறுக்கப்பட்டிருப்பதனால் இது தொடர்பாக கல்வி மற்றும் சரியான தகவல்கள் பெற்றுக் கொடுக்கும் விடயத்தில் தயக்க நிலை நிலவி வருகின்றது. இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தினால் குடும்பத்திட்டமிடல் முறைகள் மேம்படுத்தப்பட்டு வந்த போதிலும், அவை ‘திருமணம் புரிந்திருக்கும் தம்பதியினருக்கு’ மட்டும் தயாரிக்கப்பட்டவையாக இருந்து வருகின்றன.
வவுனியா குடும்ப சுகாதார மருத்துவர் செ.லவன் அவர்கள், சரியான தகவல்கள், அறிவுரைகள், கருத்தரங்குகள், விழிப்புணர்வுகள் இளவயதினருக்கு கிடைக்காமையால் இளவயதில் எதிர்பாராத கருத்தரிப்பு ஏற்படுவதுடன், அவை சிறுவர் திருமணங்களுக்கு பங்களிப்புச் செய்கின்றன. குறிப்பாக, வட பகுதியில் இளம் வயது திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் பொருட்டு சம்பிரதாய பூர்வமான திருமணங்கள் இடம்பெற்று வருகின்றன. இத்தகைய சம்பிரதாய பூர்வமான திருமணங்கள் வட பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் பொதுவாக காணப்படுகின்றன எனத் தெரிவித்தார்.
பெருந்தொகையான சடங்குகள் நிகழ்த்தப்பட்ட பின்னர் இத் தம்பதியினர் திருமணம் செய்கின்றனர். அதன் பின்னர் அத்தம்பதியினர் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்கின்றனர். இத்தகைய திருமண பந்தங்களுக்கு சமூக அங்கிகாரம் கிடைப்பதுடன், தம்பதியினர் சட்டபூர்வமான வயதடைந்த பின்னர் அவை பதிவு செய்யப்படுகின்றனர். இவை எந்த அளவுக்கு சகித்துக்கொள்ளப்படுகின்றது என்பதனை காட்டுவதற்கான அளவு ரீதியான சான்றுகள் இல்லாவிட்டாலும் கூட, இலங்கையில் சிறுவர் உரிமைகளின் பாதுகாப்பை பொறுத்த வரையில் அது ஒரு பின்னடையையே எடுத்துக் காட்டுகின்றது.
18 வயதுக்கு குறைந்த எவரையேனும் நபரொருவர் திருமணம் செய்வதை சட்ட விரோதமாக்கி 1995 ஆம் ஆண்டின் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இது சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடு தொடர்பாக குறிப்பாக சிறுவர் உரிமைகள் பற்றி உருவாக்கப்பட்டிருக்கும் கடப்பாடுகள் தொடர்பான இலங்கையின் அர்ப்பணிப்புணர்வை பிரதிபலித்துக் காட்டுகின்றது. இலங்கையின் சிறுவர் உரிமைகளை அமுல் செய்தல் மற்றும் பாதுகாத்தல் என்பவற்றுக்கான தர ரீதியான மிக முக்கியமான ஒரு சட்டத்தையும் அது வழங்குகின்றது.
ஊழல் பதிவாளர்களினால் மோசடியான விதத்தில் ஆவணங்கள் தயாரிக்கப்படுதல் அல்லது சட்டத்தை பிழையான விதத்தில் புரிந்து கொள்ளுதல் அல்லது பிழையான விதத்தில் பிரயோகித்தல் என்பவற்றையும் உள்ளடக்கிய பல்வேறு காரணங்களினால் குறைந்த வயது திருமணங்கள் பதிவு மேற்கொள்ளப்படுகின்றது. சட்டத்தில் இடம்பெறும் முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு குறைந்த வயது திருமணங்கள் இடம்பெறுவதற்கான காரணங்களை புரிந்து கொள்வது மிக முக்கியமாகும்.
சிறுவர் உரிமைகள் குறித்து இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகள் என்பது பிறப்புக்கள், மரணங்கள் மற்றும் திருமணங்கள் என்பவற்றை பதிவு செய்வதற்கு வினைத்திறன் மிக்க முறையொன்றை உறுதிப்படுத்துவது மட்டுமன்றி, அவற்றின் பதிவினை கட்டாயப்படுத்துவதினை உறுதிப்படுத்துக்கொள்வது வரையில் நீடித்துச் செல்ல வேண்டும்.
சிறுவர் திருமணங்களை சகித்துக்கொள்ளும் முஸ்லீம் திருமண மற்றும் மணநீக்கச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தொடர்ந்தும் பரிந்துரைகளை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் மற்றும் மணநீக்கம் குறித்த பொதுச்சட்டம் மற்றும் கண்டியச்சட்டம் என்பன தொடர்பாக 1995 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை முஸ்லீம் சமூகமே முன்னெடுக்க வேண்டிய நிலை இருந்து வருகின்றது. குறிப்பாக சிறுவர் திருமணங்கள் அதிகளவில் இடம்பெற்று வரும் பிரதேசங்களை இலக்காககொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை அரசு ஆரம்பித்து வைத்தல் வேண்டும். போரினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இத்தகைய விழிப்புணர்வு பிரச்சார செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுதல் வேண்டும். குறிப்பாக சிறுவர் திருமணங்கள் இளம்பெண்கள் மீது எடுத்துவரக்கூடிய தீங்கினை புரிந்துகொள்ளச் செய்யும் விதத்தில் சமூகங்கள், பாடசாலைகள், இளைஞர் குழுக்கள் ஆகிய தரப்பினருக்கு விழிப்புணர்வூட்டுதல் வேண்டும். இதற்கான உபாய ரீதியான ஒரு பிரச்சார இயக்கம் உருவாக்கப்பட்டு அதில் தேசிய மற்றும் உள்ளுர் ஊடகப்பிரச்சாரங்களையும் சமூகத்தலைவர்கள், பொலிசார் மற்றும் சட்டத்தை அமுல்செய்யும் ஏனைய ஆளனியினர், அரசாங்க (சுகாதார மற்றும் மருத்துவத் துறை ) அதிகாரிகள் ஆகியோரையும் உள்ளடக்குதல் வேண்டும்.
பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் சட்டபூர்வமான வயது 16 வருடங்களாக தக்க வைத்துக் கொள்ளப்படுதல் வேண்டும். பாலியல் விவகாரங்கள் தொடர்பாக முடிவுகளை மேற்கொள்வதில் இப்பொழுது இளம் பெண்களில் அதிகரித்து வரும் ஆற்றலை கருத்தில் கொண்டும், 16 வயதுக்குக் குறைந்த பெண் பிள்ளைகளை பாலியல் சுரண்டலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்குமென 1995 ஆம் ஆண்டில் பாலுறவாக்க சம்மதம் தெரிவிக்கும் சட்டபூர்வமான வயதாக 16 வருடங்கள் இனங்காணப்பட்டிருந்தது. பொலிஸார், அரச வழக்குத் தொடுனர்கள் மற்றும் நீதிமன்றங்கள் ஆகிய தரப்பினர் சம்மந்தப்பட்ட பெண் 15 வயதுக்கு மேற்பட்டவராக இருந்து வரும் சந்தர்பத்திலும் இருவருக்குமிடையில் ‘காதல் தொடர்பு’ நிலவி வந்தற்கான சாட்சியங்கள் இருந்து வரும் சந்தர்பத்திலும் அல்லது இருவரும் சேர்ந்து வாழ்வதுடன் 18 வயதை எட்டிய பின்னர் திருமணம் செய்வதற்கான சான்று இருந்து வருமிடத்தும் அதற்கான ஏற்பாடுகளை வழங்குகின்றனர்.
இன்னும் சிலர் இவர்களது வாழ்வாதாரத்துக்காக நாட் கூலிக்கு வயல்களிலும் தோட்டங்களிலும் வேலை செய்வோராக இருக்கின்றனர். நாட் கூலி என்பது மிக மிகக் குறைவான வருமானம். அதிலும் நிச்சயமற்ற தொழில். ஆகவே நிச்சயமற்ற வருமானம். இவ்வாறான நிலையில் தமது குழந்தைகளுக்கு ஒழுங்கான உணவையோ கல்வியையோ வழங்க முடியாதவர்களாக இருக்கின்றனர். இதனால் குழந்தைகளின் எதிர்காலமாவது நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக அம்மாவாகிய நான் இவ்வாறு இளம்வயதில் திருமணத்தை செய்துவைக்கின்றேன் என ஒருசாரார் தனது வேதனையை வெளிக்காட்டுகின்றனர்.
இளம்வயதில் திருமணம் செய்கின்றவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்க்கு முயற்சிக்கும் முகமாகவும் மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறுவர் நலன் பேணுகின்ற அரசாங்க நிறுவனங்கள் நல்ல நோக்கத்துடன் பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவேன்டும். இவர்களது நல்ல நோக்கங்கள் மட்டும் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்காது. பல்வேறு சமூக பிரச்சனைகளை எதிர்நோக்குகின்ற கல்வி கற்க முடியாத, தனியாக விடப்பட்ட குழந்தைகளை அரசாங்கம் பொறுப்பெடுக்க வேண்டியது தவிர்க்க முடியாதது. இது அவர்களின் பொறுப்பாகும். சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எல்லாநேரங்களிலும் இந்தப் பிரச்சனைகளின் பன்முகத்தன்மைகளை ஆராய்ந்து வெறுமனே இயந்திரமயமாக செயற்படாது தமக்கு கொடுக்கப்பட்ட தொழில்சார் கட்டளைகளைப் பின்பற்றி பொறுப்புடன் செயல்பட வேண்டும். வெறுமனே கடமையாக மட்டும் செயல்படாமல் பெற்றோருக்கு வழிகாட்டியாகவும் செயல்படவேண்டும்.
குழந்தைகளை நல்லமுறையில் வளர்த்து கரை சேர்ப்பதற்க்கு குழந்தைகள் கிராமங்களில் அல்லது குறிப்பிட்ட சில குடும்பங்களில் இருந்தால் கற்க மாட்டார்கள் அல்லது ஒழுங்கான பழக்கவழக்கங்களை பின்பற்ற மாட்டார்கள் என்ற முன் அனுமானத்துடன் சிறுவர்களை பலவந்தமாக இளவயது திருமணங்களுக்கு திணித்து வருகின்றனர். இதனால் பல சிறுவர்கள் திருணத்தின் பின் மீண்டும் தமது வீடுகளுக்கு சென்று விடுகின்றனர். அண்மைக்காலமாக எமது பிரதேச சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் துர்ப்பாக்கிய சம்பவங்கள் இடம்பெறுவதையும் நாம் கண்கூடாக பார்த்திருக்கின்றோம். இதனால் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆகிய எங்களின் பார்வை இதில் உள்ளடக்கப்பட வேண்டும் இவ்வாறு செயல்படுவதன் மூலம் இளவயது திருமணத்தை குறைக்கலாம் என்பது எனது கருத்தாகும் என பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுபாஷினி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்தக் குழந்தைகளில் உண்மையான அக்கறை கொண்டதாக இருப்பின் பெற்றோரின் பொருளாதார கஸ்டங்களையும் அவர்கள் மீதான சுமைகளையும் நீக்குவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். வெறுமனே அபிவிருத்திகள் மட்டும் செய்வது முன்னேற்றமல்ல. மறுபுறம் அபிவிருத்திகள் நடைபெறுகின்ற அதேவேகத்திற்கு உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துச் செல்கின்றன. இது வறுமையில் வாழ்கின்ற குடும்பங்களை மேலும் வறுமைக்குள் தள்ளுகின்றது. அடுத்ததாக அரசாங்கம் ஒரு பெற்றோர் குழந்தைகள் பெறுவதற்கு முன் பெற்றோராக வருவதற்கான தகமைகள் அவர்களுக்கு இருக்கின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆகக் குறைந்த்து பெற்றோராக இருப்பதன் பொறுப்புகள் என்ன என்பதை உணர்த்துவதற்கான வழிவகைகளை அரசாங்கம் உருவாக்க வேண்டும். அப்பொழுதுதான் பெற்றோரும் குழந்தைகளைப் பெறும் முன்னர் அதற்கான அடிப்படைத் தேவைகளை உருவாக்கவும் தம்மை வளர்க்கவும் முடியும். இவ்வாறான பெற்றோரின் குழந்தைகளே ஆரோக்கியமாக வளரவும் நன்றாக கல்வி கற்கவும் முடியும்.
இவ்வாறு இளவயதில் திருமணம் செய்து வாழ்கின்ற சிறுவர்களின் பிரச்சனைகள் பன்முகத்தன்மை கொண்டமை. அனைத்து சிறுவர்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது. ஒரு வரையறைக்குள் அடக்கவும் முடியாது. ஒவ்வொரு சிறுவர்களும் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் அவரவருக்கு தனித்துவமானவை. ஆகவே தனித்தனியாக அனுகப்பட வேண்டியவை. இதனுடாக இந்தக் குழந்தைகள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை அடையாளம் கண்டு வெளிக்கொண்டு வருவதுடன், இதைத் தீர்ப்பதற்கான வழிவகைகளையும் கண்டறியலாம். அதேவேளை இந்த சிறுவர்கள் ஒவ்வொருவரினதும் ஆற்றல்களை கண்டறிந்து அதை வளர்ப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். இதன்மூலம் சிறுவர்களின் எதிர்காலத்தை ஒளி மயமாக்கலாம்.
இலங்கையில் சிறுவர் திருமணங்களை இல்லாதொழிப்பது முன்னுரிமையாக இருந்து வருதல் வேண்டும். கடந்த தாசப்தத்தின் போது சிறுவர் திருமணங்களை குறைத்துக் கொள்வதற்கான இலங்கையின் ஆற்றல் காரணமாக பல வருட காலமாக இலங்கை தென்னாசியாவில் ஒரு வெற்றிக் கதையாக எடுத்துக் கூறப்பட்டு வந்திருக்கின்றது. எவ்வாறு இருப்பினும் இன்னமும் 12 வீதமான பிள்ளைகள் 18 வயதையடைவதற்கு முன்னர் திருமணம் செய்வதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர். எனவே இலங்கையில் சிறுவர் திருமணத்தை இல்லாதொழிப்பதற்கான ஓர் உபாய ரீதியான திட்டதுடன் இணைந்த விதத்தில் தேவையான சட்ட சீர்திருத்தங்களை நிறைவேற்றி வைப்பதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
குறைந்த வயது திருமணம் மற்றும் சேர்ந்து வாழ்தல் என்பவற்றின் பாதகமான பின்விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சட்ட சீர்த்திருத்தங்களுக்கு மேலதிகமாக கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, மாகாண சபைகள் மற்றும் சம்மந்தப்பட்ட ஏனைய அரசாங்க திணைக்களங்கள் என்பவற்றுக்கூடாக தேசிய மட்டதிலும் நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல் செய்யப்படுதல் வேண்டும். இது தொடர்பாக உள்ளுர் மட்டத்திலும் விழிப்புணர்வு, சட்ட ஏற்பாடுகள் மற்றும் இத்தகைய சட்ட ஏற்பாடுகளின் பின்னணியில் இருந்து வரும் காரணங்கள் என்பவற்றை சமூகங்கள் புரிந்து கொள்வது மிக முக்கியமாகும். இதன் மூலமே இளவயது திருமணங்களை தடுத்து ஒரு ஆரோக்கியமான சமூகத்தையும், சமூக கட்டுப் கோப்புக்களையும் பாதுகாக்க முடியும்.
தகவல்
(1) சிறுவர் நன்னடத்தை அதிகாரி
(2) பிரதேச செயலாளர்
(3) திருமணப் பதிவாளர்
(4) சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி
(5) பிரதேச பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்