தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை மாலத்தீவு உள்ளிட்ட நாட்டினரால் கைது செய்யப்படுவதை தடுக்க, நம்மை சுற்றி இருக்கக்கூடிய நாடுகளோடு பேசி ஒரு நட்புடணர்வோடு மீனவர்களை பாதுகாக்க கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடியில் எம்பி கனிமொழி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 12
மீனவர்கள் மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இது குறித்து தூத்துக்குடி எம்பி. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடியைச் சேர்ந்த 12 மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதற்காக இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இது தொடர்பாக ஒன்றிய அரசு உதவ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
இலங்கையில் இருக்கக்கூடிய மீனவ அமைப்புகளுடன் இங்கே இருக்கக்கூடிய மீனவ அமைப்புகள் பேசி ஒரு தீர்வை காண வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறாத சூழ்நிலை உள்ளது. இதை மறுபடியும் தொடங்கினாலே இலங்கைக்கும் நமக்கும் இருக்கக்கூடிய பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண முடியும்.
ஒவ்வொரு இடத்திலும் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அவர்கள் விடுதலை செய்யப்படுவதும், அவர்களின் படகுகளைப் பிடித்துக் கொண்டு அதை திருப்பித் தராததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது.இதற்கு நிரந்தர தீர்வாக நம்மை சுற்றி இருக்கக்கூடிய நாடுகளோடு பேசி ஒரு நட்புடணர்வோடு மீனவர்களை பாதுகாக்க கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.