கிழக்கு அண்டார்டிகாவில் பென்குயின்கள் கொத்து கொத்தாக இறப்பது பேரழிவு என்று சூழ்நிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அடேலி வகை பென்குயின்களின் பிறந்த இரண்டு குஞ்சுகளைத் தவிர அனைத்து பென்குயின் குஞ்சுகளும் உணவின்றி பட்டினியால் இறந்துள்ளன.
அண்டார்டிகாவை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் அளவுக்கும் அதிகமான பனி சூழ்ந்துள்ளதால், பென்குயின்கள் தங்கள் குஞ்சுகளுக்கு உணவு தேட மிகவும் நீண்ட தூரம் கடலுக்குள் செல்ல வேண்டியுள்ளது. அதனால், உணவு கிடைக்கத் தாமதமாகி பட்டினியால் அந்த இளம் குஞ்சுகள் இறந்துள்ளன. சுமார் 36,000 பென்குயின்கள் வசிக்கும் அந்த பென்குயின் குடியிருப்பில் கடல்சார்
உயிரினங்களின் பாதுகாப்பு பகுதி ஒன்றை அவசரமாக உருவாக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. அந்தப் பகுதிகளில் இறால் வகை மீன்கள் பிடிக்கப்படுவது தடை செய்யப்பட்டால், அங்கு பென்குயின்களுக்கு உணவுக்கான போட்டி குறைந்து அவை உணவு தேடி நீண்ட தூரம் செல்வது குறையும் என்றும் அதனால் அடேலி வகை பென்குயின்கள் உள்பட அனைத்து கடல்வாழ் உயிரினங்களும் பாதுகாக்கப்படும் என்று வோர்ல்டு வைடு ஃபண்ட் ஃபார் நேச்சர் எனும் சுற்றுச்சூழல் அமைப்பு கூறியுள்ளது.
எனவே கிழக்கு அண்டார்டிக்கா பகுதியில் புதிய கடல்சார் உயிரினங்களின் பாதுகாப்பு பகுதி ஒன்றை உருவாக்கி பென்குயின்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.