‘அணு ஆயுதம் அற்ற உறுப்பு நாடாக, என்.பி.டி., எனப்படும், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் சேர்வதற்கான வாய்ப்பு இல்லை’ என, இந்தியா, திட்டவட்டமாக கூறியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த, ஐ.நா., பொதுச்சபையில், ஆயுதங்கள் ஒழிப்பு மாநாட்டுக்கான இந்திய பிரதிநிதி, அமன்தீப் சிங்கில், பேசியதாவது: அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் தொடர்பாக, இந்தியாவின் நிலைப்பாடு அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒன்று. இந்த விஷயத்தில், இந்தியாவை மீண்டும் வற்புறுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதேசமயம், உலகளாவிய, அணு ஆயுதப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேம்படுத்த வேண்டும் என்பதை, இந்தியா ஆதரிக்கிறது.
அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில், உறுப்பினராக இல்லாதபோதும், அதன் கொள்கைகள், நோக்கங்களை, இந்தியா, சிறப்பாக பின்பற்றி வருகிறது. அணு ஆயுதப் பரவல் தடுப்பு கொள்கைகளை வலிமைப்படுத்துவதில், இந்தியா உறுதியாக உள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக, இந்தியாவின் கருத்துக்களை முன்வைத்துள்ளோம் அதேபோல், பிற நண்பர்களும், அணு ஆயுதப்பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளை தவிர்ப்பது தொடர்பாக, தங்கள் கருத்துக்களை முன்வைப்பர் என நம்புகிறோம்.
அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளுக்கு எதிராக, அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம். அதேபோல், அணு ஆயுதங்களை, முதலில் பயன்படுத்தக்கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளோம். அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களில், இந்தியா பங்கேற்கவில்லை. எனவே, அந்த ஒப்பந்தத்தின் அங்கமாக இந்தியா இருக்க இயலாது. எனவே, இந்த ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவசியம், இந்தியாவுக்கு கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.