அட்டன் நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள பெருந்தோட்டத் துறைகளில வாழ்ந்துவரும் சிறுவர்களின் கால்பந்தாட்ட ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் கால்பந்தாட்ட செயலமர்வு முதல் தடவையாக அட்டன் நகரில் நடைபெறவுள்ளது.
அட்டன் பொலிஸ் பிரிவு, யுக்திய செயற்பாட்டுப் பிரிவு ஆகியனவும் அட்டன் கால்பந்தாட்டப் பிரியர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கால்பந்தாட்ட செயலமர்வை பொலிஸ் கழகத்தின் முன்னாள் கோல்காப்பாளர் – பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த கலகெதர நடத்துகிறார்.
இலங்கையில் மஹிந்த கலகெதர நடத்தும் 40ஆவது எம்.ஜி. கால்பந்தாட்ட செயலமர்வு இதுவாகும்.
அட்டன் டன்பார் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் 4.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நடைபெறவுள்ள இந்த செயலமர்வில் அட்டன் பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 200 சிறுவர்கள் பங்குபற்றவுள்ளனர்.
அவர்களுக்கு கால்பந்தாட்ட நுட்பங்கள் தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்படுவதடன் செயலமர்வில் பங்குபற்றும் 200 பேருக்கும் பரிசுகள் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் சீட்டிழுப்பு மூலம் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு 50,000 ரூபாவுக்கான பற்றுச்சீட்டு வழங்கப்படும்.
அட்டன் பிரதேசத்தில் உள்ள 9 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இணைந்து 100 பரிசுகளை வழங்கவுள்ளனர். ஏனைய 100 பரிசுகளை நன்கொடையாளர் ஒருவர் வழங்குகிறார்.
இந்த செயலமர்வில் பங்குபற்றுவோருக்கு இலவச வைத்திய ஆலோசனைகள் மற்றும் கண் பரிசோதனைகள் என்பன நடத்தப்படும்.