ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அடைக்கலம் தேடி வருபவர்களை விரட்டி யடிப்பது பன்னாட்டு ஏதிலிகள் சட்டத்தின்படி மாபெரும் குற்றமாகும்.
மியன்மார் நாட்டில் அரங்கேற்றப்பட்டுள்ள இனப்படுகொலை நடவடிக்கையையடுத்து அங்கிருந்து அடைக்கலம் தேடி இலங்கை வந்துள்ள ரோஹிங்ய முஸ்லிம் மக்களைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும்”
இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
கொழும்பில் ரோஹிங்ய முஸ்லிம் மக்கள் மீது பௌத்த பிக்குமாரும், சிங்கள இனவாதிகளும் நடத்திய அட்டூழியங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாட்டில் இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபடும் சிலர், அகதிகளாக இலங்கை வந்துள்ள ரோஹிங்ய முஸ்லிம் மக்களை விரட்டியடிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நடவடிக்கை ஐ.நாவின் பன்னாட்டு ஏதிலிகள் சட்டத்துக்கு முரணானது.
இலங்கை வந்துள்ள ரோஹிங்ய முஸ்லிம் மக்களுக்கு ஏதிலிக் குடியிருமை வழங்கி அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அரசின் கடமையாகும். இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கான உரிய நடவடிக்கையை அரசு எடுக்கவேண்டும். அந்த மக்களுக்கு மனிதநேயத்தின் அடிப்படையில் உதவ வேண்டும்.
நாட்டில் இந்த ஆட்சியிலும் இடைஇடையே இனவாதச் செயற்பாடுகள் அரங்கேறுகின்றன. நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் குழப்பியடிக்கும் இந்தச் செயற்பாடுகளுக்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.