அடுத்த வருடம் மக்கள் ஜனாதிபதித் தேர்தலை எதிர்பார்க்கலாம் என ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஒரே நாளில் மூன்று தேர்தல்கள்
தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருவதால், ஜனாதிபதி, நாடாளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஒரே தினத்தில் நடத்த முடியுமா என்று நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தேன்.
அடுத்த ஆண்L மார்ச் மாதத்திற்கு பின்னர் ஆகஸ்ட் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்ல முடியும். இதனடிப்படையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்க மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.
மக்களுக்கான சிறந்த தீர்வாக ஜனாதிபதித் தேர்தல் இருக்கும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐந்து ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
தேர்தல் மூலம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும்
அவர் விலகி சென்றுள்ளதால், தேர்தல் மூலம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும். இதனடிப்படையில் பார்த்தல் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்த சிறந்த காலமாக இருக்கும்.
ஜனாதிபதி, நாடாளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் நடத்தினால் செலவுகள், வீண் விரயங்களை குறைக்க முடியும் எனவும் நவீன் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.