வடகொரியா அடுத்த வலிமையான ஏவுகணை தாக்குதல் ஒன்றுக்குத் தயாராவதாக ரஷ்ய எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ள தகவலால் உலக நாடுகள் மீண்டும் பதற்றத்தில் உறைந்துள்ளன.
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், வடகொரியாவில் புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதனால், சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களைச் சம்பாதித்தது வடகொரியா.
சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது, ஐ.நா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும், அதை வடகொரியா பொருட்படுத்தவேயில்லை. இந்நிலையில் உலக நாடுகள் பலவும் வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதனால் வடகொரியாவுக்கு அத்தியாவசியப் பொருள்கள், எரிபொருள் உள்பட அனைத்து ஏற்றுமதிகளும் உலக நாடுகளால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று எம்.பி-க்கள் வடகொரியாவுக்கு கடந்த அக்டோபர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சுற்றுப்பயணம் சென்று மாஸ்கோ திரும்பியுள்ளனர்.இவர்களுள் ஒரு எம்.பி-யான ஆண்டன் மொரசோவ் தன் பயண அனுபவம் குறித்து கூறுகையில், “வடகொரியா புதிதாக நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை ஒன்றை தயார்படுத்தி வருகிறது. அந்த ஏவுகணை கடலோரப் பகுதிகளைத் தாக்கும் வல்லமை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வடகொரியா போராட்ட மனப்பாங்குடனே உள்ளது” என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இந்த ரஷ்ய எம்.பி-யின் உரையால் வடகொரியா மீண்டுமொரு ஏவுகணை சோதனை நடத்துமோ என்ற பதற்றம் உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.