தமிழ், தெலுங்கு இரண்டு திரையுலகத்தையும், இரண்டு மொழி பேசும் மாநிலங்களின் அரசியலையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது. நடிகராக இருந்த எம்ஜிஆர் தனிக் கட்சி ஆரம்பித்து ஆட்சி செய்தார். அது போலவே நடிகராக இருந்த என்டிஆர் தனிக் கட்சி ஆரம்பித்து ஆந்திராவில் ஆட்சி செய்தார். இருவரும் மறைந்த பின்னரும் அவர்களது கட்சிகள் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இருவரும் ஆரம்பித்த கட்சிகளின் ஆட்சிதான் தற்போது தமிழ்நாடு, ஆந்திராவில் இருக்கிறது.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட சிலர் தனிக் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டார்கள். இப்போது ரஜினிகாந்த் தனிக் கட்சிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு வேலைகளை ஆரம்பித்துவிட்டார். அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என அறிவித்திருந்த கமல்ஹாசனும் விரைவில் அவரது கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.
ஆந்திராவில் பவன் கல்யாண் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேலைகள ஆரம்பித்துவிட்டார்.
தமிழ்நாட்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தவிர விஷால் விரைவில் கட்சி ஆரம்பிக்கலாம் என்ற தகவலும் வெளியாக உள்ளது. அதற்கு முன்னோட்டமாகத்தான் அவர் ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தார் என்கிறார்கள். அடுத்த மாதம் அவரது கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.
விஜய்யும் நீண்ட காலமாகவே அரசியலில் இறங்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார். ‘மெர்சல்’ சர்ச்சை விவகாரத்தில் அது தெளிவாகவே தெரிந்தது. இவர்களது வரிசையில் அடுத்து யாரெல்லாம் அரசியல் ஆசையில் இருக்கிறார்களோ என பொது மக்களிடம் அச்சம் எழுந்துள்ளது.
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பல நடிகர்களின் கட்சி கண்டிப்பாகக் களத்தில் இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.