உத்தேச நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் மற்றும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் ஆகியவற்றை மேற்கோள்காட்டிக் கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை எவ்வித சமரசமுமின்றிப் பாதுகாப்பது இன்றியமையாததாகும் எனத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் முன்மொழிப்பட்டள்ள உத்தேச நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலம் மற்றும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் பல்வேறும் தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் நிலையில், அவ்விரு சட்டமூலங்களும் எதிர்வரும் செவ்வாய்கிழமை (3) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்துத் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், இலங்கைக்கு நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலமொன்று தேவைப்படுமாக இருந்தால், தொழில்நுட்பத்துறை சார்ந்தோர், சிவில் சமூகத்தினர் மற்றும் பல்துறைசார் நிபுணர்கள் போன்ற தரப்பினரின் கருத்துக்கள் அதில் உள்வாங்கப்படுவது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதுமாத்திரமன்றி கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தைப் பாதுகாப்பது மிக அவசியம் என்றும், அது எவ்வகையிலும் சமரசம் செய்துகொள்ளப்படமுடியாத – பாதுகாக்கப்படவேண்டிய அடிப்படை உரிமை என்றும் தூதுவர் ஜுலி சங் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று சர்வதேச நியமங்களுக்கு அமைவாகவும், ஏனைய ஜனநாயக நாடுகளில் பின்பற்றப்படும் முறைகளை ஒத்த விதத்திலும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தைத் திருத்தியமைப்பதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அவர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ‘இலங்கையர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை சுதந்திரம் என்பன இன்றியமையாதனவாகும். எனவே செயற்திறன்மிக்க சட்டவாக்கத்தின் ஊடாக இவற்றுக்கு இடையில் சீரான சமநிலையைப் பேணுவதன் மூலம் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும், அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கு ஏற்றவகையில் சட்டங்களைப் பயன்படுத்தவும் முடியும்’ என்றும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.