சிலர் தன்னையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவையும் மோத வைக்கப் பார்ப்பதாகவும், தனக்கும் அவருக்குமிடையில் எவ்வித பகையுமில்லையெனவும் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பதவியை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பம் முதலே சுதந்திரக் கட்சிக்கு தமிழ், சிங்கள மக்களின் ஒத்துழைப்பு இருந்து வருகிறது. அனைத்து இன மக்களையும் பாதுகாக்க வேண்டிய தேவை கட்சிக்கு இருப்பதால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சி செயற்பாடுகளில் இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை அனுமதிக்க மாட்டேன் என்றும் தயாசிறி எம்.பி ஆணித்தரமாக கூறினார்.
கிராம மட்டத்திலுள்ளவர்கள் வெவ்வேறு நிலைப்பாட்டில் இருந்தாலும்கூட கட்சி தலைவர்களென்ற வகையில் நாம் அடிப்படைவாதத்துக்கு இடமளிக்கப் போவதில்லை. அது தொடர்பான எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்க நாம் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.