அடவிநயினார் அணைக்கட்டு அருவிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அதிரடி தடை விதிக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ளது அடவிநயினார் அணைக்கட்டு 132 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை மூலம் சுமார் 7500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகின்றன.
சீசன் காலங்களில் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் இப்பகுதியில் அமைந்துள்ள குண்டாறு நீர்த்தேக்கம், அடவிநயினார் நீர்த்தேக்கம், மேக்கரை வழியாக கேரளா மாநிலம் கும்பாவூருட்டி, பாலருவி அருவிகளுக்கும் சென்று குளித்து மகிழ்வதுண்டு. சுற்றுலா வரும் பயணிகள் அடவிநயினார் நீர்த்தேக்கம் மலைப்பகுதியில் அமைந்துள்ள தனியார் அருவிக்கு சென்று குளிக்க பொதுப்பணி துறை மூலம் வாகன கட்டணம் செலுத்தி சென்று வந்தனர்.
இவ்வாறு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் விவசாயத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் மடைமீது அமர்ந்து மது அருந்திவிட்டும், அணை பகுதியில் பாட்டில்களை உடைத்துவிட்டு சக சுற்றுலா பயணிகளிடம் கை கலப்பில் ஈடுபடுவது மட்டும் இல்லாமல் பல்வேறு சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மலை பகுதியில் மது பாட்டில்கள் உடைந்து கிடப்பது பிளாஸ்டிக் பைகள் அதிகளவில் குவிந்து கிடப்பதால் வன விலங்குகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இதனை தடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சுற்றுலா பயணிகளின் செயல்பாடு குறித்து இப்பகுதி விவசாயிகள் சரமாரி புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் சனிக்கிழமை முதல் அடவிநயினார் நீர்த்தேக்கம் மேல் உள்ள அருவிக்கும், அணை பகுதிக்கும் செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிரடி தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதனால் மிகுந்த ஆர்வத்துடன் வந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த உத்தரவு பல்வேறு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி விவசாய சங்கத்தினர் சார்பில் நன்றி தெரிவிக்கபட்டது.