நடிகர் அஜித் குமார் நடிப்பில் தயாராகி வரும் ‘விடாமுயற்சி’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநரும், நடிகருமான மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ எனும் திரைப்படத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். சர்வைவல் எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் எனும் நாட்டில் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற்று வரும் எக்சன் காட்சிகளின் உருவாக்க காணொளிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நாயகன் அஜித் குமார் ஸ்டைலாக நடந்து வருவதுடன், ‘விடாமுயற்சி’ திருவினையாக்கும் என வாசகத்தையும், ‘அவர் பாதையில்..’ எனும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வாசகங்களும் இடம் பிடித்திருப்பதால், இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதனிடையே அஜித்குமார் நடிப்பில் தயாராகி வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியான 24 மணி தியாலத்தில் 62 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டு புதிய சாதனையை படைத்திருந்தார்கள் என்பதும், அத்தகைய சாதனையை ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கும் கிடைக்கும் என திரையுலகினர் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.