சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய் இருவர் பற்றி சினிமா பிரபலங்கள், டிவி பிரபலங்கள், அல்லது வேறு துறையைச் சார்ந்த பிரபலங்கள் பேசினாலோ, ஒரு டுவீட் போட்டாலோ உடனே அதை ‘டிரென்ட்’ செய்வதை அவரவர் ரசிகர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
யாராவது அவர்களின் கவனத்தையும், மீடியாக்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்ப வேண்டும் என்று நினைத்தால் அவர்களைப் பற்றி தும்மினாலே போதும் உடனே அது டிரென்ட் ஆகிவிடும் நிலைதான் உள்ளது.
இயக்குனர் சுசீந்திரன், ஒரு காலத்தில் ‘வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஜீவா’ உள்ளிட்ட சிறந்த படங்களைக் கொடுத்தவர். சமீப காலமாக தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்து வருகிறார். அவருக்கு முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா ஆகியோரை வைத்து படம் இயக்க முடியவில்லை என்பதில் பலத்த வருத்தம் உண்டு. அதைப் பலமுறை பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று காலை திடீரென இயக்குனர் சுசீந்திரன், நடிகர் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என ஒரு டுவீட்டைப் பதிவிட்டார். உடனே, பலரும் அதற்கு ஆதரவாகவும், எதிர்பார்ப்பாகவும் கமெண்ட்டுகளைப் பதிவு செய்ய ஆரம்பித்தனர்.
#அரசியல்வேண்டாம்அஜித்தேபோதும்” என டுவிட்டரில் டிரென்ட் ஆகும் அளவிற்கு விவகாரம் காரசாரமாகப் போனது. சுசீந்திரன் பதிவிட்ட கருத்து அவருக்கு இலவசமாக பெரிய விளம்பரத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.