நடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாள் மட்டுமல்ல, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பெப்ரவரி 24 ஆம் திகதியான இன்று, இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் அஜித் குமாரின் ‘வலிமை’ வெளியாகியிருக்கிறது. இந்த படம், இரசிகர்களின் பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் அளிக்கிறதா? இல்லையா? என்பதைக் காண்போம்.
பொலிஸ் அதிகாரியான அஜித்குமாருக்கும், மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்து போதைபொருளை கடத்தி விற்கும் கும்பலுக்கும் இடையே நடைபெறும் யார் வலியவன்? என்ற போட்டி தான் இந்த படத்தின் கதை.
மதுரையில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றும் அஜித்துக்கு, வேலையில்லா பட்டதாரியான தம்பி, அளவுக்கு அதிகமாக பாசம் காட்டும் அம்மா, வழக்கம் போல் பிறந்த வீட்டை குத்திக்காட்டும் அக்கா, குடிகார அண்ணன், கோபக்கார அண்ணி… என ஒரு குடும்பம் இருக்கிறது. இந்த குடும்பத்தைக் காப்பாற்றிக்கொண்டே, தன் காவல் பணியையும் சிறப்பாக செய்கிறார்.
சென்னையில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள், செயின் பறிப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, கொலை ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் சென்னை பொலிசார் திணறுகிறார்கள். இவர்களை கட்டுப்படுத்தவும், இதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கவும் சென்னை பொலிசார், மதுரையில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றும் அஜித்குமாரின் உதவியை நாடுகிறார்கள்.
அவரும் சென்னைக்கு வருகை தந்து, தற்கொலை வழக்கு ஒன்றை விசாரிக்க தொடங்குகிறார். விசாரணையில் கொலம்பியாவிலிருந்து பாண்டிச்சேரி கடல் வழியாக வரும் போதைப்பொருட்கள், சில குழுக்களின் உதவியுடன் சென்னைக்கு வருவதும், அதனை பிரத்யேக இணையதளம் மூலமாக விற்பனை செய்யப்படுவதையும் கண்டறிகிறார்.
அதனைத் தொடர்ந்து இதன் பின்னணியில் செயல்படும் நபர் யார்? என்பதை கண்டறிந்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாத சூழல் உருவாகிறது. ஏனெனில் வில்லன் கார்த்திகேயா, அஜித் குமாரின் தம்பியை மூளைச்சலவை செய்து, தங்களுடைய குற்றச் செயலுக்கு பயன்படுத்துகிறார். அஜித்குமாரின் கவனத்தை திசை திருப்பி, அவரது வலிமையை குறைக்கிறார்.
இதனைக் கடந்து அஜித்குமார் மன வலிமையுடன் போராடி, தனது தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றினாரா..? வில்லனின் பிடியில் இருக்கும் தனது தம்பியை மீட்டாரா? வில்லனை கண்டறிந்து, அவரது வலிமையை வீழ்த்தினாரா? என்பதுதான் இப்படத்தின் கதை.
அஜித்தின் அறிமுக காட்சி, அந்தரங்கத்தில் அமைத்திருப்பதால் ரசிகர்களுக்கு ஆச்சரியமும், உற்சாகமும் ஏற்படுகிறது. ‘நாங்க வேற மாறி…’ பாடலுக்கு வழக்கம்போல் கஷ்டப்பட்டு நடனமாடுகிறார் அஜித். அம்மா, அண்ணன், தம்பி, அக்கா ஆகியோருடன் பேசும்போது பாசத்தை கொட்டுகிறார். ஊதாரி அண்ணனை உதறித்தள்ளி அண்ணி வீட்டை விட்டு செல்லும் போது.., அவர் அம்மாவிடம் பேசும் வசனங்கள் நன்றாக இருக்கிறது.
எம்முடைய வீட்டில் வேலைக்குச் செல்லாத இளைஞர்களை, ‘தண்டச்சோறு’ என எதிர்மறையான வார்த்தைகளால் அர்ச்சித்தால்.. அவர்கள் சமூக விரோதிகளின் மூளைச் சலவைக்கு ஆளாக்கப்பட்டு, குற்றவாளியாக மாறி விடுவார்கள் என்ற யதார்த்தமான உண்மையை முகத்தில் அடித்தாற்போல் உணர்த்துகிறார் இயக்குநர். அதே தருணத்தில் இன்றைய இளைஞர்களுக்கு தேவையான அறிவுரையை அளவோடும், வலிமையோடும் அஜித் மூலமாகவே வசனங்களால் சொல்லி ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
அஜித்துக்கு காதலியாக வரும் நடிகை ஹூமா குரேஷி. சீருடை அணியாத =ஓவியம் வரையக்கூடிய= பொலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். திரைக்கதையில் அஜித்துக்கு வழக்கம்போல் உதவிசெய்வதுடன் ஆக்ஷன் காட்சியிலும் நடித்து தன் பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார்.
திரைக்கதையில் சுவராசியமான திருப்பத்தை ஏற்படுத்தும் அஜித்தின் இளைய சகோதரர் வேடத்தில் நடிகர் ராஜ் ஐயப்பன் நடித்திருக்கிறார். அஜித்தின் இளவயது அம்மாவாக நடித்திருக்கும் நடிகை உமா, பொலிஸ் உயரதிகாரியாக மூத்த நடிகர் செல்வா ஆகியோர் தங்களது பாத்திரங்களை உணர்ந்து நடித்து பாராட்டு பெறுகிறார்கள்.
திரைக்கதையின் பயணத்தில் பல இடங்களில் பலவீனம் இருந்தாலும், சண்டை காட்சிகளை பிரமாண்டமாக அமைத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் இயக்குநர். பல இடங்களில் வசனங்கள் இயல்பாகவும், சில இடங்களில் திணிப்பாகவும் இருக்கிறது. ஓரிரு இடங்களில் அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வசனங்கள் இடம்பிடித்திருக்கிறது. பின்னணி இசை, ஒளிப்பதிவு என இரண்டும் இயக்குநருக்கு வலிமையாக தோள் கொடுத்திருக்கிறது.
‘சதுரங்கவேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ உருவாகி இருப்பதால், திரை ஆர்வலர்கள் வித்தியாசமான அஜித்தை எதிர்பார்த்து திரை அரங்கினுள் நுழைந்தால்..,அவர்களுக்கு 60 சதவீத திருப்தியை மட்டும் அளித்து, ஓரளவு ‘வலி’மையான சந்தோஷத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார் இயக்குநர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]