சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் பாயும் அக்னி-5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
அணுஆயுதம் ஏந்திச் செல்லும் இந்த ஏவுகணை நேற்று ஒடிசாவில் உள்ள டாக்டர். அப்துல்கலாம் தீவில் இருந்து ட்ரக்கில் பொருத்தப்பட்ட லாஞ்சர் மூலம் 9.53 மணிக்கு ஏவப்பட்டது. விண்ணில் பாய்ந்த 600-வது மீட்டரில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி திரும்பிய ஏவுகணை சரியான இலக்கை நோக்கி முன்னேறியது. 19-வது நிமிடத்தில் 4,900 கிலோ மீட்டரைக் கடந்து இலக்கைத் துல்லியமாகத் தாக்கியது.
இதன் மூலம் உலகில் 5000- 5,500 கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணைகள் வைத்திருக்கும் ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகள் பட்டியலில் இந்தியா இணைந்தது. கடந்த 6, 7 மாதங்களாக வடகொரியாவும் ஹாவ்சாங்-1, ஹாவ்சாங்-2 என்ற பெயரில் தொலை துர ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது. ஆனால், அந்நாட்டின் வெற்றி உறுதிப்படுத்தப்படவில்லை.
ஏற்கெனவே 350 கி.மீ பாயும் பிரிதிவி -2 , 700 கி.மீ செல்லும் அக்னி -1, 2000 கி.மீ பாயும் அக்னி -2, 3000 ஆயிரம் கி.மீ செல்லும் அக்னி -3, 4 ஆயிரம் கி.மீ சென்று தாக்கும் அக்னி- 4 ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில், அக்னி-3 பாகிஸ்தான் முழுவதையும் கட்டுக்குள் கொண்டு வரும். அடுத்ததாக , சீன நாடு முழுவதையும் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில்தான் அக்னி-5 பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. 2012-ம் ஆண்டு முதன்முறையாக அக்னி-5 பரிசோதனை தொடங்கியது. நேற்று நடந்தது 5-வது பரிசோதனை ஆகும். இந்த 5 பரிசோதனைகளுமே துல்லிய வெற்றி பெற்றன.
ட்ரக்குகளில் பொருத்தப்பட்டுள்ள லாஞ்சர்களில் இருந்தே அக்னி-5 ஏவுகணையை செலுத்திவிட முடியும் என்பது சிறப்பம்சம். இதனால், தேவைப்பட்ட இடத்துக்கு அக்னி ஏவுகணையைக் கொண்டு சென்று செலுத்த முடியும். 17 மீட்டர் நீளமும் 50 டன் எடை கொண்ட இந்த ஏவுகணை ஒன்றரை டன் அணுஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் படைத்தது. ஏவுகணை இலக்கைத் தாக்குவது வரை தரைப்பகுதியில் உள்ள ரேடார்களால் கண்காணிக்க முடியும். அக்னி-5 ஏவுகணை மூலம் ஐரோப்பாவின் கண்டத்தின் பாதி வரையிலும் சீனா முழுவதையும் தாக்க முடியும். துப்பாக்கிக் குண்டைவிட அதிவேகமாக செல்லும் திறன் படைத்தது இந்த ஏவுகணை.
இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், அடுத்ததாக 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு சென்று தாக்கும் ஏவுகணையை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. சீனாவிடம் உள்ள 11,200 கிலோ மீட்டர் பாயும் டி.எஃப் 31-ஏ மற்றும் 14,500 கிலோ மீட்டர் சென்று தாக்கும் டி.எஃப்-41 ஏவுகணைக்கு இணையாக தயாரிக்க முடிவு செய்துள்ளது.