நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக மன்னாரில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்த மன்னாரைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களில் மன்னார் எமில்நகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பம் ஒன்றின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு கடற்படையினர் சிவில் உடையில் சென்று அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் எமில்நகர் மற்றும் சிலாபத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு தலைமன்னாரில் இருந்து தமிழகம் நோக்கி பயணித்துள்ளனர்.
குறித்த நபர்களை படகோட்டி கடலில் உள்ள தீடை பகுதியில் இறக்கி விட்டு சென்ற நிலையில், தனுஷ்கோடியை அடுத்துள்ள 4 ஆவது மணல் திட்டு பகுதியில் குறித்த 6 பேரும் நின்றுள்ளனர்.
தகவலறிந்து அவர்களை அழைத்து வர மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சொந்தமான கப்பல் விரைந்து சென்று நேற்று செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை அவர்களை மீட்டனர்.
இந்த நிலையில் மன்னார் எமில்நகர் பகுதியில் இருந்து இந்தியா சென்ற இளம் குடும்பம் ஒன்றின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு சிவில் உடையில் சென்ற கடற்படையினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
மேலும் குறித்த இளம் குடும்பத்தினரின் பெற்றோர்களை கைது செய்ய முற்பட்டுள்ளதாகவும் இந்தியாவைச் சென்றடைந்த மேரி கிளாரி என்ற பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் தொடர்ந்து விசாரணை என்ற போர்வையில் சிவில் உடையில் பலர் வீட்டுக்கு வருவதாகவும் உரிய சீருடை, அடையாள அட்டைகள் இன்றி அச்சுறுத்தும் விதமாகவும், கொலை கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் போல தங்களை அச்சுறுத்தும் விதமாகவும் விசாரணைகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த அச்சுறுத்தல்கள் மற்றும் விசாரணைகள் தொடரும் பட்சத்தில் தாங்கள் பொலிஸ் நிலையம் அல்லது மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சம் அடைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என பாதிக்கப்பட்ட பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]