மனுஸ்தீவில் ஆஸ்திரேலிய அரசு நிர்வகிக்கும் தடுப்பு முகாமில் உள்ள 600 அகதிகளுக்கு நிறுத்தப்பட்டுள்ள உணவு, தண்ணீர், மருத்துவ வசதி மீண்டுமளிக்கப்பட வேண்டும் என்றும் மனிதாபிமான அவசரநிலை உருவாவதைத் தடுக்க வேண்டும் என்றும் ஐ.நா.வின் மனித உரிமை அலுவலகம் ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த அக்டோபர் 31 ஆம் தேதியுடன் என லோம்பரம் (Lombrum) கடற்படை தளத்தில் அமைந்துள்ள முகாம் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய அரசின் மாற்று முகாம் தங்களுக்கு பாதுகாப்பான இடமல்ல என இம்முகாமிலிருந்து அகதிகள் வெளியேற மறுத்துவருகின்றனர். அகதிகளை வெளியேற்றும் விதமாக உணவு, தண்ணீர், மருத்துவ வசதிகளை ஆஸ்திரேலிய அரசு துண்டித்துள்ளது.
ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையரின் பேச்சாளர் ரூப்பெர்ட் கோல்வில்லே, “முகாமில் உள்ள 600 அகதிகளுக்கும் உடனடியாக உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை ஆஸ்திரேலிய அரசு ஏற்படுத்தி தரவேண்டும். முகாம் வளாகத்தை விட்டு வெளியேறினால் உள்ளூர்வாசிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிடும் என அகதிகள் சொல்கின்றனர். கடந்த காலங்களில் நடந்த வன்முறைகளையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்களின் அச்சத்தில் நியாயம் உள்ளது” எனத் தெரிவித்துள்ள அவர், “சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் 1951 அகதிகள் உடன்பாட்டின் கீழ் இவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆஸ்திரேலியா மற்றும் பப்பு நியூ கினியா அரசுக்கு உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முகாம் மூடப்பட்டுள்ள நிலையில், அகதிகள் தண்ணீரை குப்பைத் தொட்டிகளில் நிரப்பி வைத்து குடிக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இம்முகாம் மூடப்படுவது கடந்த மே மாதமே அனைவருக்கும் தெரியும் எனக் கூறியுள்ள ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், “மனுஸ் முகாமை நரகம் என்று கூறிவந்தவர்கள், இம்முகாம் மூடப்படுகின்ற போது திறக்கக் கோருகிறார்கள்” என விமர்சித்துள்ளார். இந்த நிலையில், படகு வழியாக தஞ்சம் அடைந்தவரிகள் இனி ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படமாட்டார்கள் என மீண்டும் தெரிவித்துள்ளது ஆஸ்திரேலிய அரசு.