பாகிஸ்தான் நாட்டில் அடுத்த ஆண்டு முதல் ஃபேஸ்புக் நிறுவனத்துக்குத் தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில், 3 கோடிக்கும் மேற்பட்டோர் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். இதனிடையே, ஃபேஸ்புக்கில் மத நம்பிக்கைக்கு எதிரான கருத்தைத் தெரிவித்த மூன்று பேர், கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர்.
“ஃபேஸ்புக்கில் உள்ள போலியான கணக்குகளில், மத நம்பிக்கைக்கு எதிரான கருத்துகள் அதிகமாகப் பதியப்படுகின்றன. எனவே, ஃபேஸ்புக்கில் புதிதாகக் கணக்குகளைத் தொடங்க மொபைல் எண் கட்டாயமாக்கப்பட வேண்டும்” என்று ஃபேஸ்புக்குக்கு பாகிஸ்தான் வலியுறுத்தியது. ஆனால், பாகிஸ்தானின் கோரிக்கையை ஃபேஸ்புக் நிராகரித்தது. தொழில்நுட்பரீதியாக அது சாத்தியம் இல்லை. ஆனால், சர்ச்சைக்குரிய விஷயங்களை நீக்க முயற்சி செய்கிறோம்” என்று ஃபேஸ்புக் கூறியிருந்தது.
இந்நிலையில், சமூகவலைதளங்கள் மூலமாக, அங்கு மதநம்பிக்கைக் குறித்த கருத்துகள் அதிகம் பகிரப்பட்டு வருவதால் பாகிஸ்தான் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, தங்களது கோரிக்கையை ஏற்காவிடின் அடுத்த ஆண்டு முதல் அங்கு ஃபேஸ்புக் உள்ளிட்ட சர்ச்சைகளைக் கிளப்பும் சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்க, அந்நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.