இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஃபேஸ்புக் தொடர்பாக ஆராயும் வகையில் ஃபேஸ்புக் அதிகாரிகள் கொழும்பிற்கு விஜயம் செய்யவுள்ளதாக டிஜிட்டல் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் கொழும்பிற்கு வரும் அதிகாரிகள் அரச தரப்பு அதிகாரிகளை சந்தித்து, இது குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் சர்ச்சை குறித்து உரிய அதிகாரிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், தடைப்பட்டுள்ள ஃபேஸ்புக் பாவனை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட இனங்களுக்கு இடையிலான மோதல்களை தொடர்ந்து ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்டன.
இந்நிலையில், தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான பதிவுகளை நீக்குதல் உள்ளிட்ட அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் இணங்கும் பட்சத்திலேயே ஃபேஸ்புக் மீதான தடை நீக்கப்படும் என அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.