போருக்கு பயந்து காட்டிற்குள் ஓடிய நபர்: 40 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பிய அதிசயம்
வியட்நாம் போரில் தப்பி பிழைக்க, காட்டுக்குள் ஓடி, எலியை தின்று மரப்பட்டைகளை உடுத்தி, 40 ஆண்டுகள் அங்கு வாழ்ந்த ஒரு தந்தையும் மகனும் மீண்டும் அவர்களின் ஊருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கதைகளிலும் சினிமாவிலும் மட்டுமே அறிந்து வந்த டார்ஸான் வாழ்க்கை, வியட்நாமில் ஹோ வன் லங்கின் நிஜ வாழ்க்கையாகி இருக்கிறது.
ஹோ வன் லங் (44), மற்றும் அவருடைய தந்தை ஹோ வன் தான் (85) இருவரும் வியட்நாமில் க்வாங் காய் மாவட்டத்தில் காணப்படும் டா ட்ரா காட்டில் 41 ஆண்டுகள் தனித்து வாழ்ந்துள்ளது. எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வியட்நாமில் போர் நடந்து கொண்டிருந்தபோது, அங்கு ட்ரா கெம் பகுதியில் வசித்த ஹோ வன் தான் என்பவர் தனது 2 வயது மகன் ஹோ வன் லங்கை, தூக்கிக்கொண்டு போருக்கு பயந்து, காட்டிற்குள் ஓடிவிட்டார்.
இப்படி அவர் மிகுந்த அச்சமடைந்து குழந்தையோடு காட்டிற்கு செல்ல காரணம், அவர் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சியான திருப்பமே. அந்த சமயத்தில், அவருடைய மனைவி மற்றும் இரண்டு மகன்கள் சுரங்க வெடிவிபத்தில் பலியாகி இருந்தனர். அந்த அதிர்ச்சியிலிருந்து ஹோ வன் தான் மீளாதிருந்தார்.
இதனால், மிச்சம் இருக்கும் வாரிசான இரண்டு வயது குழந்தை ஹோ வன் லங்கை காப்பாற்றும் நோக்கிலே அவர் சென்றிருக்க வேண்டும். அதன்பிறகு, அவருக்கு எந்த உறவினருடனும் தொடர்பில்லாமல் போனது.
காட்டில், எந்த மனித ஆதரவும் இன்றி, தனிமையில் 41 வருடங்கள் இருவரும் வாழ்ந்துள்ளனர்.
காட்டில் விளைந்த சாப்பிடக்கூடிய பழங்கள், சோளம், எலி போன்றவைகளை உணவாக உட்கொண்டுள்ளனர். அங்கு ஊர்வன மற்றும் விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள 5 மீட்டர் உயரத்தில் மர பாகங்களை கொண்டு தங்குமிடம் அமைத்துக்கொண்டுள்ளனர்.
வியட்நாம் போர் முடிவுக்கு வந்து பல தசம ஆண்டுகள் ஆன பின்னும் அது பற்றிய சரியான தகவல் ஏதும் அறிந்திட வழியின்றி, அச்சத்தின் காரணமாக அங்கேயே ஒரு வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டு வாழ்ந்துவிட்டனர்.
காட்டிற்குள் சென்ற சிலரால், வினோதமாக இரண்டு பேர் அங்கு இருப்பது கவனிக்கப்பட்டு, உள்ளூர் அதிகாரிகளின் துணையோடு விசாரித்து, அவர்களுடைய பழைய ஊருக்கு 2013 ம் .ஆண்டிலேயே இருவரும் திரும்ப அழைத்துவரப்பட்டனர்.
மகன் காட்டிலே முழு வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும் அவருடைய தந்தைக்கு ஊர் உறவு பற்றிய ஞாபகங்கள் இருந்ததால், மீண்டும் அவர்களோடு சேர்ந்துகொள்வது எளிதாக இருந்தது.
இப்போது, அவர்களுடைய முன்னாள் வீட்டின் அருகே ஒரு சிறு குடிசை அமைத்து ஹோ வன் லங் வாழ்கிறார்.
சமீபத்தில், ஹோ வன் லங் காட்டில் வசித்த இடத்திற்கு உறவினர்கள், மற்றும் ஊடகவியலர் சூழ அழைத்துச் செல்லப்பட்டதால் இந்த செய்தி மீண்டும் புதிய பரவுதலை பெற்றுள்ளது..
அவர்கள் வாழ்ந்த காட்டு இருப்பிடம் நெடுந்தொலைவில் இருந்தது. பகல் முழுதும் நடந்து அதை அடைந்துள்ளனர். மீண்டும் அங்கு சென்றதும் ஹோ வன் லங்கின் உணர்வுகள் எப்படி இருக்கிறது என்பதை ஆராயவே இந்த பயணம்.
அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில், தான் வாழ்ந்த பகுதிகளை மறக்க முடியாதவராக உணர்ச்சியுடன் பார்த்தார். அவர் எல்லாவற்றையும் நினைவுகூர்வதையும் கவனிக்க முடிந்தது.
இந்நிலையில், ஹோ வன் லங் மீண்டும் தனது பழைய காட்டு வாழ்வையே வாழ விரும்புவதாக அவருடைய நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன என புகைப்படக்காரர் ஆல்வரோ செரசோ தனது ’ப்ளாக்’ கில் குறிப்பிட்டுள்ளார். இதை உறுதிப்படுத்தவே அவருடைய சகோதரர் மற்றும் தன்னுடைய மொழிபெயர்ப்பாளருடன் அங்கு சென்றதாகவும் கூறுகிறார்.
ஒரு வினோதமான செய்தி கிடைத்துள்ளது, என்ற பார்வையோடு மட்டும் நில்லாமல், நாடுகளின் தேவையற்ற போர் நடவடிக்கைகளால் மக்களின் வாழ்க்கை முறைகள் எப்படி எல்லாம் புரட்டிப்போடப்படுகிறது என்பதற்கு இதுவே ஒரு நல்ல உதாரணம்.
ஆட்சியாளர்கள், ஆயுதங்களோடு பேசிக்கொண்டிருந்ததால், மக்களின் இதயங்களோடு பேசும் வாய்ப்பு விடுபட்டுப் போகும் என்பதை இனியாவது உணர்வார்களா?