இத்தாலி நாட்டில் பிறந்த குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக போதை மருந்தை கொடுத்த செவிலியப் பெண் ஒருவர் அந்நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலியில் உள்ள வீறோனா நகரில் வசித்து வரும் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக மருத்துவமனை ஒன்றில் கடந்த மார்ச் மாதம் சேர்க்கப்பட்டுள்ளார்.
கர்ப்பிணியை செவிலியப் பெண் ஒருவர் பரிசோதனை செய்து வந்த நேரத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்ததும் பலமாக அழ தொடங்கியதால் அதனை கட்டுப்படுத்த செவிலியர் முயன்றுள்ளார். ஆனால், குழந்தை தொடர்ச்சியாக அழுதுள்ளது.
குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக வலியை தீர்க்கும் மார்ஃபின் எனப்படும் போதை மருந்தைக் குழந்தைக்குக் கொடுத்துள்ளார்.
போதை மருந்து உடலில் கலந்ததும் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உயர் மருத்துவர்கள் உடனடியாக சென்று குழந்தைக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
அப்போது, குழந்தையின் குருதியில் போதை மருந்து கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவர்கள் நடத்திய விசாரணையில், பணியில் இருந்த அந்த செவிலியப் பெண் ‘குழந்தையின் அழுகையை நிறுத்த மார்ஃபின் மருந்து கொடுத்ததாக’ ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த முயன்ற குற்றத்திற்காக கடந்த வியாழக்கிழமை செவிலியப் பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.