பிரித்தானியாவின் உறுப்புரிமைக்கு ரூடோ ஆதரவு
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் என, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ (Justin Trudeau) தெரிவித்த கருத்தை, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை செயலாளர் வரவேற்றுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை செயலாளர் பெட்ரிக்கா மொக்ஹெரினி (Federica Mogherini), கடந்த புதன்கிழமையன்று கனேடிய தலைநகர் ஒட்டாவாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
குறித்த விஜயம், கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்டெபான் (Stephane Dion) மற்றும் அவரது அமைச்சரவை பிரதிநிதிகளுடன் Brexit விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவே மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த ரூடோ, “பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருந்தாலே அதிக சுபீட்சம் ஏற்படும்” என தெரிவித்திருந்தார்.
பெட்ரிக்கா மொக்ஹெரினி மற்றும் ரூடோ, பிரித்தானியாவின் உறுப்புரிமை குறித்த பேச்சுவார்த்தைக்கு புறம்பாக காலநிலை மாற்றம், ஐரோப்பாவில் காணப்படும் இடப்பெயர்வு நெருக்கடி, மற்றும் சிரியாவில் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் என்பன தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.