‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தின் தணிக்கை சர்ச்சையானதைத் தொடர்ந்து, தணிக்கைக் குழுவை கடுமையாக சாடியுள்ளார் இயக்குநர் ராகேஷ்.
துருவா, ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன்ன’. பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அச்சு இசையமைத்துள்ளார்.
இறுதிக்கட்ட பணிகள் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. தணிக்கையில் சர்ச்சையானதைத் தொடர்ந்து, அங்கு நடந்தது என்னவென்று இயக்குநர் ராகேஷ் கூறியிருப்பதாவது:
‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்திய கதையாகும். ஒவ்வொரு நாளும் பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தும் சமூக விரோத சம்பவங்கள் நிறைய நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
அதை செய்திகளாகப் படிக்கிறோம். தொலைக்காட்சிகளில் சிசிடிவியினால் பதிவு செய்யப்பட்ட வீடியோவாகப் பார்க்கிறோம். சமூக வலைதளங்களில் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். அங்கெல்லாம் தணிக்கை தலையிடுவதில்லை.
அதனால் மக்களின் மனம் பாதிக்கப்படுகிறதா இல்லையா என யாரும் தடை விதிப்பதில்லை. ஆனால் அதையே மக்களுக்கும் பெண்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக எடுத்தால் பிரம்பை தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறது தணிக்கைக் குழு.
நான் சொல்லியிருக்கும் கதையை இங்கு நடக்கவில்லையென்றோ, அவை சமூகவலைதளங்களில் வலம் வரவில்லையென்றோ தணிக்கைக் குழுவால் மறுக்க முடியவில்லை. ஆனால் எந்த சான்றிதழும் தராமல் மறுக்க மட்டும் முடிந்திருக்கிறது.
எடுத்த படத்தையே பார்க்க ஒருமாதம் இழுத்தடிக்கும் இவர்களிடம் கதையைக் கொடுத்து படிக்கச் சொல்லி ஓகே வாங்கி படம் பண்ணமுடியுமா?. எடுத்த பின் நம் கருத்துச் சுதந்திரம் சிக்கி சின்னாபின்னமாகி துண்டு துக்கடாவாகி வெளிவருகிறது. இப்போது என் படத்திற்கு தணிக்கையில் ‘யு/ஏ’ அல்லது ‘ஏ’ சான்றிதழாவது தாங்க என்று வாதாடி, அழுதும் கூட கேட்டுப் பார்த்துவிட்டேன். எந்த சான்றிதழும் தரவில்லை. மறுதணிக்கைக்கு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். பெண்களுக்கான, சிறுவர்களுக்கான விழிப்புணர்வு படம் இது.
சிகரெட் பிடிக்காதீர்கள் என்பதை சிகரெட் பிடிப்பதுபோல் காட்டித்தானே எச்சரிக்கிறார்கள்? அதுபோல சமூக விரோத சம்பவங்களைக் காட்டித்தான் என் படத்தில் எச்சரிக்கை செய்துள்ளேன். அதற்கு மறுதணிக்கையா?
ஒரு நல்ல படம் இப்படி பாடாய்ப் படணுமா? சமீபத்தில் ‘தரமணி’ படத்திற்கும் இப்படியொரு கொடுமை நடந்திருக்கிறது. படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரம் இந்த சினிமாவில் மட்டும் இவ்வளவு கடுமையாக தாக்கப்படுகிறது.
இவ்வாறு ராகேஷ் தெரிவித்துள்ளார்.