காதலனை பொலிஸ் சுட்டுக்கொல்வதை நேரடியாக வீடியோ எடுத்து வெளியிட்ட காதலி
அமெரிக்காவில் காதலனை பொலிசார் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதை அவரது காதலி நேரடியாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மினிசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று இரவு 9 மணியளவில் லாவிஸ் ரினோல்ட்ஸ் என்ற பெண் தனது கருப்பினத்தை சேர்ந்த காதலனுடன் காரில் பயணம் செய்துள்ளார்.
லாவிஸ் காரை ஓட்ட அருகில் அவரது காதலன் அமர்ந்திருந்துள்ளார்.
அப்போது, காரில் உள்ள விளக்கு ஒன்று உடைந்திருந்ததை பார்த்த பொலிசார் ஒருவர் காரை தடுத்து நிறுத்தியுள்ளார்.
காதனை பார்த்த அந்த பொலிசார் ‘உங்களுடைய லைசென்ஸ் மற்றும் ID-களை காட்டுக்கங்கள்’ எனக் கேட்டுள்ளார்.
அப்போது, ‘அவரிடம் துப்பாக்கி இருக்கிறது. அதை எடுத்துச் செல்ல அவருக்கு அனுமதியும் இருக்கிறது’ என அருகில் அமர்ந்திருந்த காதலி கூறியுள்ளார்.
இச்சூழலில் காதலன் லைசென்ஸை எடுக்க கைகளை சட்டைக்குள் நுழைத்துள்ளார்.
‘நபர் துப்பாக்கியை தான் எடுக்கிறார்’ என அச்சமுற்ற பொலிசார் அவரை நோக்கி 4 முறை சரமாரியாக சுட்டுத்தள்ளுகிறார்.
இந்த கொடூர காட்சியை கண்ட காதலி உடனடியாக பேஸ்புக்கில் உள்ள வீடியோ வசதியை பயன்படுத்தி தனது காதலன் ரத்த வெள்ளத்தில் துடிப்பதை நேரடியாக வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
இச்சம்பவம் நிகழ்ந்து ஓரிரு நிமிடங்களில் காதலன் உயிரிழந்து விடுகிறார்.
பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட வீடியோவை பார்த்த நூற்றுக்கணக்கான நபர்கள் அதிகாலை 3 மணியளவில் மினிசோட்டா ஆளுநர் மாளிகை முன்னிலையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சற்று முன்னர் வெளியான தகவலில், ஆளுநரை பொலிசார் பின் கதவு வழியாக வேறு இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருப்பின நபரை சுட்டுக்கொன்ற பொலிஸ் அதிகாரி தற்போது விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.