ஐ.எஸ் ரொக்கட் தாக்குதல்கள் : 8 பேர் உயிரிழப்பு, 80 பேர் காயம்
வட சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள சில பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட ரொக்கட் தாக்குதல்களில், குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சிரியாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சனா, இன்று ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட ரொக்கட் தாக்குதல்களில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களே அதிகளவில் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை, அலெப்போவின் al-Furqan மற்றும் al-Sukan குடியிருப்புப் பகுதிகளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட ரொக்கட் தாக்குதல்களில் குறைந்தது 30 பொதுமக்கள் உயிரிழந்ததுடன், மேலும் 140 பேர் வரையில் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து அலெப்போ மாகாணத்தின் ஒரு பகுதியின் கட்டுப்பாடு அரச படையினர் வசமும், மறு பகுதியின் கட்டுப்பாடு தீவிரவாதிகள் வசமும் இருந்து வருகின்றது. அதில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகளை அரச படையினர் தொடர்ச்சியாகக் கைப்பற்றி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.