கொலன்னாவை, முத்துராஜவல ஆகிய இடங்களிலுள்ள எரிபொருள் களஞ்சிய சாலைகளின் விநியோக நடவடிக்கைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விநியோக நடவடிக்கையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றோலிய வளத் துறை ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நாட்டிலுள்ள சகல எரிபொருள் நிலையங்களிலும் எரிபொருள் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு நேற்றிரவு ஜனாதிபதி எரிபொருள் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டுள்ளார்.
கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலுள்ள ஊழியர்கள் சகலரும் இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டு இராணுவம் அதனைக் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.