இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி: வரலாற்று வெற்றியை பதிவு செய்த வங்கதேசம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 108 ஓட்டங்களால் வெற்றி பெற்ற வங்கதேச அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
இங்கிலாந்து- வங்கதேசம் அணிகள் மோதிய 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது.
இதில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 220 ஓட்டங்களும், இங்கிலாந்து அணி 244 ஓட்டங்களும் எடுத்தன.
களத்தடுப்பில் சொதப்பிய இங்கிலாந்து அணி வங்கதேசத்தை 2வது இன்னிங்சில் 296 ஓட்டங்கள் வரை எடுக்க அனுமதித்தது.
இதனையடுத்து 4ம் நாளான இன்று இங்கிலாந்துக்கு 273 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் அலிஸ்டர் குக் (59), டக்கெட் (56) சிறப்பாக ஆடினர். அவர்கள் முதல் விக்கெட்டுக்கு அபாரமாக ஆடி 100 ஓட்டங்களைச் சேர்த்தனர்.
ஆனால் தேநீர் இடைவேளைக்குப் பிறகு அந்த அணி அதிர்ச்சிகரமாக 10 விக்கெட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் 108 ஓட்டங்களால் வெற்றி பெற்ற வங்கதேச அணி தொடரை 1-1 என சமன் செய்தது.
வங்கதேச அணியின் இளம் சுழற்பந்து வீரர் மெஹதி ஹசன் மிராஸ் 2 இன்னிங்ஸ்களிலும் தலா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 12 விக்கெட்டுகளை தனது 2வது டெஸ்ட் போட்டியிலேயே சாய்த்தார்.
ஷாகிப் அல் ஹசன் தன் ஒரே ஓவரில் ஸ்டோக்ஸ், ரஷீத், அன்சாரி ஆகியோரை வீழ்த்தி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இது வங்கதேச அணியின் 8வது டெஸ்ட் வெற்றியாகும். வங்கதேச அணிக்கு இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றி நிச்சயம் அந்நாட்டு கிரிக்கெட்டில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்ட நாயகனாகவும், தொடர்நாயகனாகவும் அறிமுக சுழற்பந்துவீச்சாளர் மெஹதி ஹசன் மிராஸ் தேர்வு செய்யப்பட்டார்.