“அடுத்தடுத்து படுகொலைகள்” சரத்குமாரின் சூப்பரான ஐடியா- வைரலாகும் பதிவு
தமிழ்நாட்டில் சமூகத்தில் நிகழும் கொடூர கொலைகளை தடுக்கும் வகையில் இளைஞர் படையை உருவாக்க சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பான இவரது பேஸ்புக் பதிவு வைரலாகியுள்ளது.
இதில், மரம் வெட்டுபவன் குலம் நாசம் என்பார்கள், ஆனால் சக மனிதனை வெட்டுவதை வேடிக்கை பார்க்கும் அளவிற்கு மனித குலம் குரூரமானதாக ஆகிவிட்டதா?
அமைதி இன்றி பாதை தடுமாறி செல்லும் மனித இனத்தை நல் வழியில் எடுத்து செல்ல ஒரு கண்ணனோ, ஏசுவோ, புத்தரோ, காந்தியோ பிறக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறோமா?
நம் சமுதாயத்தில் நமது வருங்கால சந்ததியர் அன்புடன் அமைதியுடன் வாழ வேண்டாமா?
உலகின் பல பகுதிகளில் சமீப காலங்களில் மிக அதிக அளவில் கொடூர முறையில் நடக்கும் கொலைகளையும், சிறு விஷயங்களுக்கு உயிரை மாய்த்துக் கொள்ளும் செய்திகளையும் எந்த உணர்ச்சியும் இல்லாமல் படிக்க பழகிக் கொண்டுவிட்டோம் என்று தோன்றுகிறது.
உலகத்தில் வளர்ந்த நாடு, வளரும் நாடு, மிகவும் பின் தங்கிய நாடு என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து வகை மக்களிடமும் இந்த கொடுமைகள் நிகழ்ந்தேறுவதை கண்டும் இதை மாற்றுவதற்கு வழி தெரியாமல் இயலாமையை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள கூட நேரமில்லாமல் ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு விட்டோம்.
ஒரு சமுதாய கொடுமையை பற்றி தெரிந்ததும் அதைப் பற்றியே சில நாட்கள் பேசுவதும், தாம் நல்லவர் என்று பறை சாற்றிக்கொள்ளும் வகையில் சில கருத்துக்களை உதிர்ப்பதும் பல பேருக்கு ஒரு பொழுது போக்கு போல் ஆகிவிட்டது. பேசுபவர் அனைவரும் இப்படிப்பட்டவர் என சொல்ல முடியாது.
எனினும் நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலையை கண்ணால் பார்த்த நூற்றுக்கு மேற்பட்டவரில் பெரும்பாலானோர் இப்படிப்பட்டவராக இருந்திருப்பார்கள்.
இது போன்ற செயல்களுக்கு வாய் வார்த்தைகளால் தீர்வு சொல்வதை விட செயலில் இறங்கினால் நிகழும் கொடுமைகளை தடுக்க முடியும்
முதலில் கொலை போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களின் உள்நோக்கம் என்ன, எது போன்ற செயல்கள் சாதாரண மனிதனை வக்கிர எண்ணம் கொண்டவராக மாற்றி அவர்களை கொலை செய்ய தூண்டுகிறது என்பதை அலசி ஆராய்ந்து தீர்வு காண வேண்டும்.
இது போன்ற குற்றங்கள், நாட்டின் ஆரோக்கியத்திற்கு எதிரானது. பாதுகாப்பு இல்லாத எந்த சமுதாயமும் முன்னேற முடியாது. அதுவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில் அந்த சமுதாயம் வளர்ச்சியை காண முடியாது என்பது மஹாபாரத காலத்திலிருந்தே நமக்கு அறிவுறுத்தப் பட்ட உண்மை.
பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த நடவடிக்கை ஒவ்வொரு அரசின் தலையாய கடமை என்றாலும், நமது நாட்டின் மக்கள் தொகையும் காவல் துறையினரின் சதவீதமும் இது போன்ற குற்றங்களை அறவே தடுப்பதென்பது இயலாத ஒன்றாகும்.
நம்மில் பலர் கல்வியை அணுகும் முறை, வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் தன்மை, மேற் படிப்பிற்காகவும் வேலைக்காகவும் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்கள், உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் சில நொடிகளில் தொடர்பு கொள்ள முடிகின்ற வசதி, இந்த நிகழ்வுகளால் வாழ்க்கை முறையில் கொண்டு வர நினைக்கும் மாற்றங்கள், ஆழமில்லா உறவுகள், உறவுகளை புரிந்து கொள்ள முடியாத குழப்பம், மேற்கத்திய நாகரீகத்தின் மேல் உள்ள மோகம், நாகரீகம் என்ற பெயரில் மற்றவரின் அங்கீகாரத்திற்காக வாழும் பொய்யான வாழ்க்கை என பல காரணங்கள் நம்மை சுற்றி உள்ளன.
இவை எல்லாவற்றிலும் நமக்கு ஒரு தெளிவு பிறந்தால், எதை நோக்கி செல்ல வேண்டும் என்ற உறுதி இருந்தால் ஒரு காதல் தோல்வியோ, தேர்வில் தோல்வியோ, நிதி பிரச்னையோ,உறவுகளிடம் இருக்கும் பிணக்கமோ நம்மை ஒன்றும் செய்ய முடியாது.
ஸ்வாதியை கொலை செய்த கொலையாளி உருவாகுவற்கு நமது சமுதாயம் – அதாவது – நாமும் ஒரு காரணம் என்று சொன்னால் மிகையாகாது. இது போன்ற எண்ணங்கள் உருவாகுவது இந்த சமுதாயத்தில் இருந்துதான்.
இந்த சமுதாயத்தை உருவாக்குவதில் நமக்கும் பங்கு இருக்கிறது.
மக்களின் விழிப்புணர்வு, பொறுப்புணர்ச்சி, மக்கள் தன்னை தானே பாதுகாக்கும் திறமை, அடுத்த உயிரை தன்னுயிர் போல காக்க நினைக்கும் மக்கள், மக்களை வழி நடத்தும் ஆசிரியர்கள், குடும்பம், உறவினர்கள், தலைவர்கள் என சமுதாயத்தின் அனைத்து அங்கங்களும் உறுதி எடுத்து இணைந்து செயல்பட்டால்தான் இந்த அவல நிலையை மாற்ற முடியும்.
இதற்கெல்லாம் நம்மால் விடை காண முடியுமா, நாம் வாழும் காலத்திற்குள்ளே ஏதேனும் மாற்றம் கொண்டு வர முடியுமா என என் மனதின் அடித்தளத்தில் நீண்ட காலமாக கேள்வி. ராமருக்கு இலங்கை செல்ல பாலம் அமைக்க அணில் முயன்றது போல, நாமும் ஆக்க பூர்வமான செயல்களில் நம்மால் முயன்ற அளவில் ஈடுபட வேண்டும், சமுதாயத்தில் சிறிதேனும் நமது பங்களிப்பு இருக்க வேண்டும் என பயணிப்பவன் நான்.
இந்த கொடூரம் நிகழ்வுகளுக்கு விடை காணும் முயற்சியாக 100 இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தயார் செய்ய எண்ணம் கொண்டுள்ளேன்.
முதலில் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், தன்னை தானே பாதுகாத்து கொள்பவர்களாகவும், பின்னர் இது போன்ற கொடுமைகளை கண் எதிரே நிகழாமல் தடுப்பவர்களாகவும் உருவாக்குவதென்று திட்டமிட்டுள்ளேன்.
என்னுடைய இந்த முயற்சிக்கு ஆதரவு அளிப்பவர்களும், இது போன்ற பணிகளுக்கு விருப்பம் உள்ளவர்களும் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அரசியல் சாயம் இல்லாத மக்கள் பணியாற்றிட விரும்பும் மக்களை வேண்டி அழைக்கிறேன்.
இந்த முகநூல் பதிவில் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். நன்றி” என்று கூறியுள்ளார்.
இந்த பதிவுக்கு இளைஞர்கள் ஆதரவை தெரிவித்து வருவதுடன் வைரலாகியுள்ளது.