‘PANAMX’ இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள கனேடிய ராணுவம்
அமெரிக்க இராணுவம் நடாத்தும் ‘PANAMX’ எனப்படும் பாரிய ராணுவப் பயிற்சி நடவடிக்கையில் கனேடிய இராணுவமும் கலந்துகொண்டுள்ளது. அவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரை குறித்த பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் என்ற தகவலை கனேடிய தேசிய பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரபல கடல் போக்குவரத்து மார்க்கமான பனாமா கால்வாய் பகுதியை ஆண்டு தோறும் சுமார் 14,000 கப்பல்கள் பயன்படுத்தி வருகின்ற நிலையில், அந்த பகுதியில் குறித்த பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த பயிற்சி நடவடிக்கையில் சுமார் 20 நாடுகளின் வீரர்கள் பங்குபற்றுகின்றனர்.
கடலிலும், தரையிலும், வானிலும், இணையங்கள் வாயிலாகவும் மேற்கொள்ளப்படும் அண்மைக்கால நவீன அச்சுறுத்தல்கள் குறித்தும் இந்த பயிற்சி நடவடிக்கையின் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய படையினர் எந்த வேளையிலும் படை நடவடிக்கைகளுக்கு தயாராக இருப்பதனை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவே இவ்வாறான பயிற்சிகளில் கலந்து கொள்வது அமைந்திருப்பதாகவும் கனேடிய தேசிய பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.