தோண்டத்தோண்ட கிழம்பும் மர்மங்கள்!
திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மர்ம கிணறு தோண்டும் பணி இன்று (3) மூன்றாவது நாளாகவும் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த அகழ்வுப்பணிகள் இன்று காலை 8.35 மணி முதல் 10.15 மணிவரை இடம் பெற்றது.
இதன் போது பெக்கோ இயந்திரம் மூலம் குறித்த கிணற்றின் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது வரை 377 சென்றி மீற்றர் வரை கிணறு ஆழப்படுத்தப்பட்டு தோண்டப்பட்டது.
இதன் போது மேலும் பல தடயப்பொருட்களை விசேட தடவியல் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் 1994 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 25 சத நாணாயக்குற்றி ஒன்று, 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலாவதி திகதியிடப்பட்ட 145 ரூபாய் பெறுமதி அச்சிடப்பட்ட பியர் டின் ஒன்று, வீதி அபிவிருத்திக்கான பாரிய கற்கள், வாகனங்களுக்கு பயண்படுத்தும் ஒயில் சீல்,எலும்பு ஓட்டு எச்சங்கள் ஒரு தொகுதி, யூ வடிவிலான கம்பி,சில்வர் கரண்டியின் கைபிடி போன்றவை தடயப்பொருட்களாக இன்று புதன் கிழமை மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மாவட்ட சிரேஸ்ட சட்ட வைத்திய அதிகாரி டபில்யு.ஆர்.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்று வரும் அகழ்வுப்பணியில் அழைக்கப்பட்ட 13 அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் காணாமல் போன உறவுகள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறைஞ்சன், மற்றும் ரனித்தா ஞானராஜா ஆகியோர் கிணறு தோண்டும் இடத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தெண்ணகோண் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டு தற்போது தோண்டப்பட்டு வரும் மர்மக்கிணற்றை பார்வையிட்டார்.
கடந்த 1 ஆம் திகதி முதல் நேற்று 2 ஆம் திகதி மாலை வரை எலும்புத்துண்டுகள்,பல்,முள்ளுக்கம்பி, பாவிக்கப்படாத துப்பாக்கி ரவை-01 உறப்பை, கம்பித்துண்டுகள் என பல தடையப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலே இன்று புதன் கிழமை 3 ஆவது தடவையாக குறித்த அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட போது மேற்குறித்த பொருட்கள் தடயங்களாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.