ஆந்தராக்ஸ் நோய்த்தொற்று: ஒருவர் உயிரிழப்பு, 20 பேர் பாதிப்பு
ரஷ்யாவின் வடக்கு பிராந்தியமான யமாலோ – நெனெட்சில் (Yamalo-Nenets) ஆந்தராக்ஸ் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி, ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த சிறுவன் 12 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனரா என்பதை பரிசோதிக்கும் பொருட்டு, மேலும் 90 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த விஞ்ஞானிகள், “இந்த தொற்று ஏற்படுவதற்கு அதிகமான வெப்பநிலையே காரணம்” என தெரிவித்தனர்.
குறித்த நோய்த்தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், சுமார் 238 பேர் வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 132 பேர் சிறுவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரை பறிக்கும் கொடிய நோயாக வகைபடுத்தப்பட்டுள்ள குறித்த தொற்று, சுமார் 75 வருடங்களுக்கு முன்னதாக ரஷ்யாவில் பரவியது என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.