ஹரி – விக்ரம் இணையும் ‘சாமி 2’
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘இருமுகன்’. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். ஷிபு தமீன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
சிவகார்த்திகேயன், நிவின் பாலி, இயக்குநர் ஹரி மற்றும் ‘பாகுபலி’ கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் இயக்குநர் ஹரி பேசி முடிந்தவுடன் நிகழ்ச்சி தொகுப்பாளர் அபிஷேக் “விக்ரம் சாருடன் இணைந்து எப்போது பணியாற்றப் போகிறீர்கள்” என கேட்டார்.
அப்போது விக்ரம், ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ், ஒளிப்பதிவாளர் ப்ரியன் ஆகியோரை மேடைக்கு அழைத்தார் இயக்குநர் ஹரி. “நானும் விக்ரம் சாரும் இணைந்து ‘சாமி 2’ பண்ணவிருக்கிறோம். ‘சிங்கம் 3’ முடித்தவுடன் இப்படத்தின் பணிகள் தொடங்கப்படும்” என்று தெரிவித்தார் இயக்குநர் ஹரி.
2003ம் ஆண்டு ஹரி – விக்ரம் இணைப்பில் வெளியான படம் ‘சாமி’. பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் முடிவடையும் போது “சாமியின் வேட்டை தொடரும்” என முடிந்திருந்தார் ஹரி. அப்போதில் இருந்தே 2ம் பாகம் எப்போது என்ற கேள்வி எழுந்து வந்தது குறிப்பிடத்தக்கது.