ஓரினச் சேர்கையாளர்களின் பேரணியில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ
ஓரினச் சேர்க்கையாளர்களின் சமத்துவம் நோக்கிய வன்கூவர் வருடாந்த பேரணியில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அவரது குடுபத்தினருடன் கலந்து கொண்டிருந்தார்.
வன்கூவர் வருடாந்த பேரணியில் கடந்த பல ஆண்டுகளாக ஜஸ்ரின் ரூடோ கலந்து கொள்வது வழக்கம். எனினும். கனேடிய பிரதமர் என்ற வகையில் முதன்முறையாக இவ்வருடமே கலந்து கொண்டிருந்தார். அத்துடன் வன்கூவர் வருடாந்த பேரணியில் கலந்து கொள்ளும் நாட்டின் முதல் பிரதமராகவும் விளங்குகின்றார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த பேரணியில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்ட ஜஸ்ரின் ரூடோ வழிநெடுகிலும் ஆர்வத்துடன் பார்த்து இரசித்த பார்வையாளர்களுடன் கை குலுக்கி புகைப்படங்களையும் எடுத்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜஸ்ரின் ரூடோ, ‘பன்முகத்தன்மையே எமது நாட்டின் மிகப் பெரும் பலம். நாம் எமது சமூகத்தை கொண்டாடுகிறோம். எமது குடும்பத்தை கொண்டாடுகிறோம். இவை அனைத்தும் சேர்ந்து மிகப்பெரிய பேரணியை ஏற்படுத்தியுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 3 ஆம் திகதி ரொறன்ரோவில் நடைபெற்ற ஓரினச் சேர்க்கையாளர்களில் பேரணியிலும் ஜஸ்ரின் ரூடோ கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.