பாதுகாப்பு விதிகளை மீறிய 62 விமானிகள் இடைநீக்கம்!
கடந்த 6 மாதங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக 62 விமானிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து 29 பேருடன் புறப்பட்டு சென்று மாயமான இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் ஒருவார காலம் ஆகியும் இ்ன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த சூழலில், விமானத்தில் பணிபுரியும் விமானிகள் முறையாக பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்கின்றனரா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்டது.
இதுகுறித்து இந்திய விமானக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ள பதிலில், கடந்த 6 மாதத்தில் மட்டும் பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடிக்காத 62 விமானிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2015ம் ஆண்டில் 93 விமானிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. மாதம்தோறும் 8 பேர் வரை பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
2016ல் இந்த சராசரி 10 ஆக உயர்ந்துள்ளது. விமானிகள் மேற்கொள்ளும் தவறுகள் மற்றும் குற்றங்களை பொறுத்து தண்டனை காலம் நிர்ணயம் செய்யப்படும்.
இடை நீக்கம் ஆனவர்களில் 45 சதவீதம் பேர் மீது ஆல்கஹால் பரிசோதனை செய்யாதது, 30 சதவீதம் பேர் ஓடுதள விதிமுறைகளை மீறியது.
20 சதவீதம் பேர் பணி நேர விதிமீறல், 4 சதவீதம் பேர் இதர தவறுகள் புரிந்திருப்பதாக ஆணையத்தின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் மகேஷ் சர்மா கடந்த மே மாதம் பாராளுமன்றத்தில் அளித்த தகவலில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் விமானிகள் மீது 122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலும் ஆல்கஹால் சோதனைகளுக்கு உட்படத் தவறி குற்றச்சாட்டுதான் என தெரிவித்திருந்தார்.
கடந்த 2012ம் ஆண்டு 109 விமானிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவே 2013ல் 89 ஆக குறைந்தது. கடந்த 2014ல் 92 பேர், 2015ல் 93 பேர் என மீண்டும் விதிகளை மீறியவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.