பாதயாத்திரை தோல்வியாம்! காரணம் கூறும் அரசாங்கம்
பாதயாத்திரை மூலம் கூட்டு எதிர்க்கட்சி எதிர்பாராத பின்னடைவை சந்தித்துள்ளதாக அரசாங்க செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பத்து இலட்சம்வரையான பொதுமக்களை திரட்டி கொழும்புக்கான பாதயாத்திரையை மேற்கொள்ளப்போவதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்திருந்தது.
எனினும், ஒரு லட்சம் வரையான ஆதரவாளர்கள் கூட பாதயாத்திரையில் கலந்து கொள்ளவில்லை என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பாதயாத்திரையின் இறுதி நாளான இன்றைய தினம் போதுமான ஆதரவாளர்களின் வருகையின்மை மற்றும் வாக்குறுதியளித்த கட்சிகள், அமைப்புகளின் வருகையின்மை கூட்டு எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களுக்கு தோல்வி மனப்பான்மையை ஏற்படுத்தியிருந்தது.
ஆதரவாளர்கள் மத்தியில் எதிரொலித்த இந்த உணர்வு காரணமாக பாதயாத்திரையில் கலந்து கொள்ள வந்த பலரும் திரும்பிச் சென்றுவிட்டனர்.
இறுதியில் லிப்டன் சுற்றுவட்டாரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது பதினைந்தாயிரம் அளவிலான ஆதரவாளர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர்.
இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் கூட்டு எதிர்க்கட்சிக்கு போதுமான ஆதரவு இல்லை என்பது புலனாகியிருப்பதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.