கனேடிய பொருளாதாரத்தை சரித்த அல்பேட்டா காட்டுத்தீ!
கனடா அல்பேட்டாவில் கடந்த மே மாதம் ஏற்பட்ட பாரிய காட்டு தீயானது கனேடிய பொருளாதாரத்தை சரிவுக்கு தள்ளியுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 0.6 சதவிகிதத்தால் குறைத்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கும் மேலான கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடந்த மே மாதம் பாரிய சரிவை சந்தித்துள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த அண்மைய புள்ளிவிபரங்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது.
இந்த பொருளாதார உற்பத்தி சரிவானது பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்த அளவிலும் அதிகம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அல்பேர்டாவின் ஃபோர்ட் மக்முர்ரே பகுதியில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயினால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டதுடன் கச்சா எண்ணெய் உற்பத்தி செயற்பாடுகளும் நிறுத்திவைக்கப்பட்டது. அத்துடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் அழிவடைந்தது. இதன் காரணமாக இரண்டாம் காலாண்டின் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புக்கள் குறைவடைய ஆரம்பித்துள்ளது.
நிறுவனங்களின் பேரழிவானது அனைத்து பொருட்கள் உற்பத்தி தொழில்களின் வெளியீடுகளில் 2.8 சதவிகிதம் வீழ்ச்சிக்கு பிரதான காரணம் என்று கூறப்படுகின்றது. உற்பத்திகளின் அளவும் மிகப் பெருமளவில் பாதிக்கப்பட்டது. பெற்றோலிய சுத்திகரிகப்பு நிலையங்களில் 15 வீத வீழ்ச்சி கச்சா எண்ணெய் பற்றாக்குறையை உருவாக்கியதாக கூறப்படுகின்றது.