தீப்பிடித்து விபத்துக்குள்ளான காற்று பலூன்: 16 பேர் நிலை என்ன?
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 16 நபர்களுடன் பயணமான சூடான காற்று பலூன் தீப்பிடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரத்தின் தென் பகுதியில் இருந்து சுமார் 50 கி.மீற்றர் தொலைவில் லோக்சார்ட் என்ற இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தொலைப்பேசியில் தகவல் தெரிவித்த நபர், சாலையில் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிவதாகவே தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்த மீட்பு குழுவினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் பலூன் தீப்பிடித்து விபத்துக்குள்ளனதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகிய குழுவினர் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த விபத்தில் அந்த பலூனில் பயணம் மேற்கொண்ட 16 நபர்களும் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது.
விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பலூன் விபத்துக்களில் மிக கொடியதாக இதுவரை கருதப்படுவது எகிப்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தேயாகும். இதில் பயணம் மேற்கொண்ட 21 நபர்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேப்போன்று கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்லோவேனியா பகுதியில் விபத்துக்குள்ளான பலூனில் 6 பேர் உயிரிழந்தனர். நியூசிலாந்தில் சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற பலூன் ஒன்று உயர் அழுத்த மின்சார கம்பிகளில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.