கத்தியுடன் பேருந்தில் நுழைந்த நபர்: அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்
கனடாவில் பின்ச் சுரங்க ரயில் நிலையம் நோக்கி சென்ற பேருந்து ஒன்றில் கத்தியுடன் நுழைந்த நபரால் சக பயணிகள் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் வடக்கு யோர்க் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்கிருந்து பேருந்து ஒன்று பிஞ்ச் சுரங்க ரயில் நிலையம் நோக்கி சென்றுள்ளது. அப்போது அந்த பேருந்தில் கத்தியுடன் நபர் ஒருவர் நுழைந்துள்ளர். இதை கவனித்த பயணி ஒருவர் அச்சத்தில் அலறியபடி சக பயணிகளுக்கும் இதை தெரியப்படுத்தியுள்ளார்.
உடனடியாக பயணிகள் அனைவரும் அந்த பேருந்து ஓட்டுனரிடம் முறையிடவே அந்த நபரை பேருந்தினுள் சிறை வைத்துவிட்டு மொத்த பயணிகளும் பேருந்து ஓட்டுனரும் வெளியேறியுள்ளனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியப்படுத்தவே, டொராண்டோ பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். இதனையடுத்து பேருந்தினுள் சிறை வைக்கப்பட்டிருந்த அந்த நபரிடம் பொலிசார் பேச்சுக்கொடுத்துள்ளனர். ஆனால் அந்த நபர் பொலிசாரிடம் ஒத்துழைக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ பகுதிக்கு மருத்துவர்கள் உள்ளிட்ட பேச்சுவார்த்தை குழு ஒன்று அழைக்கப்பட்டு அந்த நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்த நபரை பத்திரமாக மீட்டு பேருந்தின் வெளியே கொண்டு வந்தனர்.
அங்கிருந்து அவரை உடனடியாக மன நல மருத்துவமனைக்கு பொலிசார் அனுப்பி வைத்தனர். பேருந்தினுள் கத்தியுடன் நுழைந்தாலும் அந்த நபர் எவரையும் அச்சுறுத்தவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி அந்த நபர் மீது வழக்கு எதுவும் பதியவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.