29 பேருடன் மாயமான விமானம்: ஆந்திர வனப்பகுதியில் விழுந்ததா?
சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமானுக்கு சென்ற விமானம் ஆந்திர வனப்பகுதியில் விழுந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தாம்பரத்தில் உள்ள ராணுவத்தளத்திலிருந்து விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் – 32 விமானம் கடந்த 22 ஆம் திகதி அந்தமானுக்கு சென்ற போது மாயமானது. அந்த விமானத்தில் 29 பேர் சென்றனர்.
விமானத்தில் சென்றவர்களின் நிலை என்னவானது என்பது இன்னமும் தெரியாமல் உள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த 17 பேர் விமானப்படையைச் சேர்ந்தவர்கள். விமானம் மாயமானதாக கருதப்படும் பகுதியில் ஒரு நீர்மூழ்கி கப்பல் உள்பட 13 கப்பல்கள் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.
தேடுதல் வேட்டையில் இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை. மேலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வரும் பகுதியில் ஆழ்கடல் ஆய்வு கப்பல் ஈடுபடுத்தப்பட உள்ளது.
இந்த கப்பல் விசாகப்பட்டினத்தில் இருந்து வரவழைக்கப்பட உள்ளது. இதனிடையே மாயமான விமானம் ஆந்திர வனப்பகுதியில் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாகப்பட்டினம் காட்டுப்பகுதியில் விமானம் விழுந்ததை பழங்குடியினர் பார்த்துள்ளதாக அளித்த தகவலையடுத்து விமானத்தைத் தேடும் பணி அப்பகுதியில் நடைபெற்று வருகிறது.
விமானம் விழுந்ததாகக் கூறப்படும் இடம் நக்சலைட் ஆதிக்கம் நிறைந்தது என்பதால், தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் விமானப் படையை சேர்ந்த குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த தகவலை அதிகாரிகள் மறுத்துள்ளனர். அந்த பகுதியில் மாவோயிஸ்ட்களை தேடும் பணி மட்டுமே நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.