திசை மாறிப்போகும் பாத யாத்திரை!
இந்த வாரம் நாட்டு மக்களின் பேசுபொருளாக இருப்பது ராஜபக்சவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காகவும், அவர்களை கடந்த காலக் குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவும் நடக்கின்ற இந்தப் பாத யாத்திரை நாளை கொழும்பில் நடக்கின்ற பேரணியுடன் முற்றுப்பெற இருக்கின்றது.
இந்தப் பாத யாத்திரை தொடங்கிய போது கண்டி மற்றும் மாவனெல்ல நகரங்களில் அதற்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதேநேரம் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்னும் பல இடங்களில் நீதிமன்றில் தடை உத்தரவு கோரிக்கைகள் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட போது அவற்றை அந்த நீதிமன்றங்கள் நிராகரித்து விட்டன.
எனவே கண்டியிலும், மாவனெல்லயிலும் இந்தத் தடை உத்தரவுகள் கொண்டுவரப்பட்டன என்பதனை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது.
ஒரே காரணத்துக்காக குறிப்பிட்ட நீதிமன்றம் தடை உத்தரவு கொடுத்த அதே காரணத்துக்காக ஏனைய இடங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்த நீதிமன்றங்கள் நிராகரித்திருக்கின்றது.
இந்த தடை உத்தரவுகளை பொலிஸார் நீதிமன்றங்களில் முன்வைத்தததன் பின்னணி என்ன என்று விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கின்றது.
கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்திலும் இதே விதமான போராட்டங்கள் நீதிமன்றத்தின் தடை உத்தரவினால் தடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவ்வாறான போராட்டக்காரர்களுக்கு துப்பாக்கி வேட்டுக்கள் பரிசாகவும் கடைத்தன என்பதும் நமக்கு நினைவுக்கு வருகிறது.
இந்த ஊர்வலம் போகின்ற நகரங்களில் ஐக்கிய தேசியக் கட்சி தனது கட்சிப் புனரமைப்பு வேலைகளைத் தொடங்கி இருப்பதால் அங்கு மோதல்கள் இடம்பெற வாயப்பு இருக்கின்றது என்பது பொலிஸார் அதற்கு முன்வைத்த வாத்.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டு இந்த அரசியல் நடவடிக்கைகளை அந்த நகரங்களில் ஏற்பாடு செய்திருந்ததோ என்றும் சந்தேகிக்க நிறையவே இடமிருக்கின்றது.
இப்போது இந்தப் பாதயாத்திரை தொடர்பாக நமக்குக் கிடைத்த தகவல்கள் என்ன என்று பார்ப்போம். இந்தப் பாத யாத்திரை ஆரம்பமாவதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரி இதனை நிறுத்த மறைமுகமாக முயற்சிகளை மேற்கொண்ட போதும் அந்த முயற்சிகள் எதுவுமே வெற்றி பெறவில்லை.
கடைசியாக நடைபெற்ற சுதந்திரக்கட்சிக் கூட்டத்தில் இந்தப் பாத யாத்திரை பற்றி ஒரு வார்த்தை கூட ஜனாதிபதி மைத்திரி குறிப்பிடவில்லை.
என்றாலும் கட்சிக் கட்டுப்பாடு என்ற விடயத்தை எவருக்கும் மீற அனுமதிக்க முடியாது என்று கூறிய ஜனாதிபதி மைத்திரி முன்னாள் அமைச்சர் பவித்ரா ஊடகங்களுக்கு முன்வைத்த சில கருத்துக்கள் தொடர்பில் அங்கு சுட்டிக்காட்டினார். ஆனால் பவித்ரா ஜனாதிபதியின் வார்த்தைக்கு மாற்றுக் கருத்துக்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
ஆனால் ஒரு சிங்கள ஊடகம் ஜனாதிபதி மைத்திரியும் பாத யாத்திரைக்குப் பச்சைக் கொடி என்ற தோரணையில் ஒரு செய்தியை வெளியிட்டு பின்னர் அதற்காக மன்னிப்புக் கேட்டு மூக்குடைபட்டுக் கொண்டது.
இதே பத்திரிகை ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு சேறு பூசும் விதமாக ஒரு செய்தியை வெளியிட்டு பின்னர் அதற்கும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட செய்தியைக் கொடுத்த பத்திரிகையாளரையும் பதவியில் இருந்து வெளியேற்றி விட்டது.
இந்தப் பாத யாத்திரை முதல் நாள் நிகழ்வின் தொடக்கத்தில் நடந்த அம்புலன்ஸ் வண்டி மீதான தாக்குதல் முற்றிலும் காட்டுமிராண்டித் தனமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கடும் கோபத்தில் இருப்பதாகவும் இது இந்த பாத யாத்திரை மகிமையை இல்லாமல் செய்துவிட்டது என்று அவர் திட்டித் தீர்த்திருக்கிறார்.
மேலும் முதல் நாள் கண்டியில் இருந்து ஆரம்பமான பாத யாத்திரையில் பங்கு கொண்ட மக்கள் கூட்டத்தினர் எண்ணிக்கை விவகாரத்தில் சிந்தனையாளர்திருப்தி இல்லாத நிலையில் இருந்ததாகவும் அறியக்கிடைக்கின்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வழக்கம் போல் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
முதல் நாள் ஊர்வலத்தில் சென்றவர்கள் 5500க்கும் 6000க்கும் இடைப்பட்டவர்கள் என்று தேரியவருகிறது. இரண்டாம் நாள் எண்ணிக்கைமேலும் வீழ்ச்சி அடைந்தது என்றும் தெரிகின்றது.
இந்த நிகழ்வின் இறுதி நாள் நடக்கின்ற பேரணியில் ஒருமில்லியன் மக்கள் கலந்து கொள்வார்கள் என்றும் மற்றொரு ஏற்பாட்டாளர் நான்கு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் கணக்குச் சொல்லியிருந்தார்கள்.
மேலும் ஊர்வலத்தில் 2000க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குமார்களும் ஒரு லட்சம் பேர் அளவில் பொதுமக்களும் தினந்தோறும் கலந்து கொள்வார்கள் என்றெல்லாம் ஊடகச் சந்திப்பில் பேசினார்கள். ஆனால் பேசியவர்களே பாத யாத்திரையில் கலந்து கொள்ளவில்லை.
கூட்டு எதிரணி அரசியல்வாதிகள் அவ்வப்போது தலையைக் காட்டி மறைகின்றார்கள். மஹிந்தவும் இடையிடையே தோன்றி மறைகின்றார். இன்னும் பலர் தங்களுக்குள்ள நோய்களைச் சொல்லி ஊர்வலத்தை தவிர்த்து வருகின்றனர்.
எனவே இந்த அரசியல்வாதிகள் சொல்வதைப் போன்று இந்தப் பேரணிக்கு ஆட்கள் வர வாயப்புகள் குறைவு என்பது தற்போது உறுதியாகி வருகின்றது. இந்தப் பின்னடைவு மஹிந்த ராஜபக்சவின் இமேஜிற்கு மாபெரும் பாதிப்பாக இருக்கின்றது.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த மிகக் குறுகிய காலத்துக்குள் இப்படி ஒரு பாத யாத்திரை மேற்கொள்வது எந்தவகையிலும் முதிர்ச்சியான ஒரு அரசியல் நடவடிக்கையாக இருக்க மாட்டாது என்பது எமது கருத்து.
அத்துடன் இது பொது மக்களின் தேவைக்காக நடாத்தப்படுகின்ற ஒரு அரசியல் போராட்டமல்ல, ஜனநாயக ரீதியில் பதவிக்கு வந்த ஒரு அரசாங்கத்தை விரட்டிவிட்டு அதிகார வெறியில் பதவிக்கு வர முனைகின்ற ஒரு வன்முறை நடவடிக்கை என்று தான் உலகமும் பொது மக்களும் இதனைப் பார்க்கின்றார்கள்.
இந்த நாட்டு அரசியலில் முக்கிய தேவையாக இருக்கின்ற புதிய அரசியல் யாப்பு விவகாரத்தை ஊர்வலக்காரர்கள் குழப்புவதை அவதானிக்க முடிகின்றது. இந்த இனவாத கோசத்தை இந்த ஊர்வலத்தில் இருக்கின்ற இடதுசாரிகள் கடுமையாக விமர்சிக்கின்றார்கள்.
எனவே ஊர்வலம் போகின்றவர்கள் மத்தியில் தொடக்கத்திலேயே முரண்பாடுகள் தோன்றியிருக்கின்றன. அரச கவிழ்ப்புக்காக மஹிந்த விசுவாசிகள் ஊர்வலம் போக மைத்திரி – ரணில் நல்லாட்சியின் ஆயுளை ஐந்து வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கட்சிக் கட்டுப்பாடுகளை மீறும் அமைப்பாளர் பதவிக்கும் மைத்திரி இந்தமுறை வேட்டுவைக்கத் தயாராகி வருகின்றார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் வருகின்ற 2017 சித்திரைப் புத்தாதண்டுக்குள் மஹிந்த தலைமையிலான அரசாங்கம் ஒன்றை நாம் அமைத்து விடுவோம் என்று மஹிந்த ராஜபக்சவின் விசுவாசி ரோஹித்த அபே குணவர்த்தன பகிரங்கமாக பேசியிருந்தார்.
அதேநேரம் இதே அணியிலுள்ள முக்கிய தலைவர்களில் ஒருவரான பந்துல குணவர்தன எமது இந்தப் பாத யாத்திரை ஆட்சி மாற்றம் ஒன்று உடனடியாக நிகழ்வதற்கு வாய்ப்புக் கிடையாது என்று கூறியிருக்கிறார்.
எனவே இந்தப் பாத யாத்திரை இப்போது கேலிக்கூத்தாக மாறி இருப்பதுடன் தங்களுக்கு இதனால் ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்காக மக்கள் ஊர்வலக்காரர்களை சபித்துக் கொண்டிருப்பதைப் பரவலாக வீதியில் பார்க்க முடிகின்றது.