எழில் – உதயநிதி பட நாயகியாக ரெஜினா ஒப்பந்தம்
‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து உதயநிதியிடம் கதை ஒன்றைத் தெரிவித்தார் இயக்குநர் எழில். அக்கதை உதயநிதிக்கு பிடிக்கவே உடனே தேதிகள் ஒதுக்கினார்.
இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உதயநிதிக்கு நண்பன் வேடத்தில் சூரி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள்.
தற்போது இப்படத்தின் நாயகியாக ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தைத் தொடர்ந்து ரெஜினா ஒப்பந்தமாகி இருக்கும் படம் இது. ரெஜினா மட்டுமன்றி சிருஷ்டி டாங்கேவும் முக்கிய கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
ஆகஸ்ட் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இயக்குநர் கெளரவ் இயக்கத்தில் உருவாகும் படம் மற்றும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ஆகியவற்றுக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் உதயநிதி.