“அரசே எமது பிள்ளைகள் எங்கே” மக்கள் ஆர்ப்பாட்டம்
கடந்தகால யுத்த சூழ்நிலையின்போது, உயிரிழந்த மற்றும் காணாமல் போன தங்களின் உறவுகளின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
தங்களுக்கு நிரந்தர வாழ்வாதார உதவிகள் செய்து தரப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து காணாமல் போனோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், மூதூர் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூதூர் பிரஜைகள் குழுவின் தலைவர் சிவசிறி இ.பாஸ்கரன் குருக்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மூதூர் தெற்கு பகுதியைச் சேர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்ட இறுதியில் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசுப்பிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.
“யுத்த நிறைவில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்த எமது பிள்ளைகள் எங்கே?” “அரசே எமது பிள்ளைகள் எப்போது திரும்பி வருவார்கள்”, “அரசே எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது?”, “உண்மை எப்போது எமக்குத் தெரியும்” போன்ற சுலோக அட்டைகளையும் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.