பிரான்ஸில் பாதிரியாரை கொன்றவர் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு!
பிரான்சின் வடக்கு பகுதியில் தேவாலயம் ஒன்றில் மூத்த பாதிரியாரை பணையகைதியாக பிடித்து படுகொலை செய்த தாக்குதல் தாரி ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஜனாதிபதி பிரான்ஸ்வா ஒல்லாந் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் தாக்குதல் தாரியின் பிடியிலிருந்து தப்பிவந்த கன்னியாஸ்திரி ஒருவர் சம்பவத்தை விபரித்துள்ளார்.
தாக்குதல் தாரி பாதிரியாரை கொலை செய்வதற்கு முன்னர் பாதிரியாரை மண்டியிடுமாறு மிரட்டினார் என்ற விபரங்களை கூறியுள்ளார்.இதனிடையே, இந்த தாக்குதலில் படுகாயமடைந்த, தேவாலயத்தின் பங்கு உறுப்பினர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை, தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் குறித்த தேவாலயத்திற்கு அருகாமையில் வசித்து வந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த நபர் கடந்த ஆண்டு ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொள்ள முயற்சித்த நிலையில் கண்காணிக்கப்பட்டு வந்தாகவும் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பிரான்ஸ் நீஸ் நகரில் அண்மையிலும் தீவிரவாத தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.84 பேரின் உயிரை காவுகொண்ட அந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற இரண்டு வாரங்கள் ஆன நிலையில் மீண்டும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.