மேற்கிந்திய தீவுகளில் அசத்தும் இந்தியா: முதல் பயிற்சிப் போட்டி “டிரா”
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணிகள் மோதிய முதல் பயிற்சிப் போட்டி டிராவில் முடிந்தது.
4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகியுள்ளது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 21ம் திகதி ஆன்டிகுவாவில் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் மோதிய முதல் பயிற்சி ஆட்டம் செயின்ட் கிட்ஸ் மைதானத்தில் நடந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 258 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
தொடக்க வீரர்கள் ராகுல் (50), தவான் (51) மற்றும் ரோஹித் சர்மா (54) ஆகியோர் சதம் விளாசினர். ஆனால் அணித்தலைவர் விராட் கோஹ்லி (14), ரஹானே (5) ஏமாற்றினர்.
இதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணி ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இதில் ஹோப் சதம் அடித்தார். அவர் 118 ஓட்டங்களும், ராஜேந்திர சந்திரிகா 69 ஓட்டங்களும், ஜோமல் வாரிசன் 50 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில், அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த பயிற்சிப் போட்டி 2 நாட்கள் மட்டுமே கொண்டதாக இருந்ததால் ஆட்டம் டிரா ஆனது. இதில் இரு அணி வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.
3 நாட்களை கொண்ட 2வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டம் எதிர் வரும் 14ம் திகதி தொடங்குகிறது.