யூரோ கிண்ணம்: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த போர்த்துக்கல்
யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸை 1-0 என வீழ்த்திய போர்த்துக்கல் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
பிரான்ஸின் செயின்ட் டெனிஸ் நகரில் இன்று நடந்த யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ்-போர்த்துக்கல் அணிகள் மோதின.
இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் ஆரம்பம் முதலே ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தின.
போர்த்துக்கல் அணியின் ரொனால்டோ 25வது நிமிடத்தில் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் அந்த அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.
தொடர்ந்து ஆண்ரின் சில்வா (66), ரெனாட்டோ சான்சஸ் (79) ஆகியோர் காயம் காரணமாக வெளியேற அந்த அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இரு அணி வீரர்களும்கோல் அடிக்கும் முனைப்பில் ஈடுபட்டும் இரு பாதியிலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் 109வது நிமிடத்தில் ரெனாட்டோ சான்சஸூக்கு பதிலாக களமிறங்கிய போர்த்துக்கல் அணியின் ஈதர் ஒரு கோல் போட்டு அசத்தினார். இதனால் போர்த்துக்கல் 1-0 என முன்னிலை பெற்றது.
கடைசி வரை பிரான்ஸ் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போர்த்துக்கல் 1-0 என வெற்றி பெற்றது.
இதன் மூலம் யூரோ கிண்ண கால்பந்து தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது போர்த்துக்கல் அணி.