மீண்டும் ஒரு காதல் விவகாரம், கழுத்து அறுக்கப்பட்ட இலங்கை அகதி பெண்!
காதலித்து, பின்னர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை அகதி பெண் ஒருவரை கழுத்தை அறுத்து கொலை செய்வதற்கு முயற்சித்த சம்பவம் ஒன்று தாரமங்கலம் அகதிகள் முகாமில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள பவளத்தானூரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.
குறித்த முகாமில் ராஜா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு நிசாந்த் மற்றும் நிஷாந்தினி உள்ளிட்ட நான்கு குழந்தைகள் இருக்கின்றனர்.
நிஷாந்தினி வேலூரில் உள்ள காலணிகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் சந்திரசேகரன் மற்றும் நிஷாந்தினி இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.
எனினும், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் முகாமுக்கு திரும்பிய நிஷாந்தினி, அங்குள்ள இலங்கை அகதி மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனை அறித்து கொண்ட சந்திரசேகரன் நிஷாந்தினி வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது வீட்டில் தனியாக இருந்த நிஷாந்தினியிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றியதையடுத்து நிஷாந்தினியை கீழே தள்ளிய சந்திரசேகரன், நிஷாந்தினியின் கழுத்தை அறுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின் போது வலியால் துடித்த நிஷாந்தினி சத்தமிட, அப்பகுதி இளைஞர்கள் சந்திரசேகரனை சுற்றிவளைத்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அத்துடன், பலத்த வெட்டுக் காயத்துடன் கிடந்த நிஷாந்தினியை மீட்டு சேலம் அரச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்திரசேகரனிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது வாக்குமூலம் அளித்த சந்திரசேகரன் ”நிஷாந்தினி தன்னை காதலித்து விட்டு, தற்போது தனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டபோது சரியாக பேசாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஆத்திரத்தில் அவரின் கழுத்தை வெட்டியதாகவும்” சந்திரசேகர் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.