மொட்டை மாடியில் இருந்து நாயை கீழே தூக்கிப்போட்ட மருத்துவ மாணவன்
மொட்டை மாடியில் இருந்து நாயை கீழே தூக்கிப்போட்டு துடிதுடிக்க வைத்தவர் சென்னையை சேர்ந்த மருத்துவ மாணவர் என்று தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் நாய் ஒன்றை மொட்டை மாடியில் இருந்து கீழே தூக்கி வீசும் காட்சி பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியாகியது. வாலிபர் மொட்டை மாடியில் இருந்து நாயை இரக்கமின்றி தூக்கி வீசும் காட்சி பார்ப்பவர்கள் மனதை பதைபதைக்க வைக்கும் விதமாக உள்ளது.
கீழேவிழுந்த அந்த நாய் வலி தாங்க முடியாமல் அழும் காட்சியுடன் அந்த வீடியோ முடிகிறது. பொறுப்புள்ள ஒரு மருத்துவராக உருவாக வேண்டிய ஒரு மாணவர் இதுபோன்ற இரக்கமற்ற அரக்கச் செயலில் ஈடுபடுவதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து, அந்த வீடியோவை வெளியிட்டவர் யார்? என்பதை கண்டுபிடிப்பதில் விலங்குகள் நல ஆர்வலர்கள் தீவிரம் காட்டினர்.
வீடியோவில் பதிவாகியிருந்த காட்சிகள் கடும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது. இருப்பதாக பொலிஸிலும் அவர்கள் புகார் அளித்தனர். அந்த வீடியோவில் இடம்பெற்றவரை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரம் காட்டினர். சர்வதேசம் மற்றும் இந்திய மனித சமூகம் என்ற அமைப்பு வீடியோவில் இடம்பெற்று இருப்பவர் தொடர்பான தகவல்களை தெரிவிப்பவருக்கு ரூ.1 இலட்சம் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்தது.
இதுதொடர்பான செய்திகள் மீடியாக்களில் வெளியாகிய நிலையில் இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர் கவுதம் என்ற மருத்துவ கல்லூரி மாணவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரியில் 4 ஆவது ஆண்டு மருத்துவ மாணவர் என்றும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக விசாரிக்க பொலிஸார்; இன்று குறித்த மாணவன் படிக்கும் கல்லூரிக்கு செல்கின்றனர். அவரிடம் விசாரணை நடத்தியபிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பொலிஸார் முடிவெடுக்க உள்ளனர்.