சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ராட்சசன் படத்தில் மாணவிகளை தவறாக பயன்படுத்தும் கொடூர ஆசிரியராக நடித்தவர் வினோத் சாகர். இதற்போது ராட்சசன் தெலங்கு ரீமேக்கிலும், அதே கேரக்டரில் நடிக்கிறார் இது தவிர சைரன், குருதி ஆட்டம், சாம்பியன் படங்களில் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ராட்சசன் திரைப்படம் எனக்கு சிறந்த அடையாளத்தை கொடுத்திருக்கிறது. இதற்கு இயக்குனர் ராம் குமார் தான் காரணம். நான் இதற்கு முன் பிச்சைக்காரன் படத்தில் நடித்திருக்கிறேன். ராட்சசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘குருதி ஆட்டம்’, ‘சாம்பியன்’, ‘சைரன்’, தெலுங்கில் உருவாகும் ராட்சசன் படத்திலும் நடிக்கிறேன். மலையாளத்தில் 2 படங்கள் நடிக்கிறேன்.
நான் துபாயில் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்து வந்தேன். பின்னர் சென்னைக்கு வந்து டப்பிங் ஆர்ட்டிஸ்டாக மாறினேன். அதன் மூலம் நடிகராக மாறினேன். இதயம் திரையரங்கம் படத்தின் இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன் தான் எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதைத் தொடர்ந்து, நான், ஹரிதாஸ், ஆரஞ்சு மிட்டாய், உறுமீன் மற்றும் பல குறும்படங்களில் நடித்திருக்கிறேன்.
சவால்கள் நிறைந்த வேடங்களில் நடிக்க விருப்பம். அது நெகட்டிவ் வேடமாக இருந்தாலும் சரி, குணச்சித்திர கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி. அடுத்தடுத்து வரும் படங்களில் கொடுத்த கதாபாத்திரத்திரத்தை சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பேன். என்றார் வினோத் சாகர்.