நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை பதிவேற்றிய பிறகு எவ்வளவு தான் தடுத்தாலும், தீவிரவாத ஆதரவுக் குழு ஒன்று உலகம் முழுவதும் பரப்பியதாக பேஸ்புக் நிறுவனம் கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.
நியூசிலாந்தில் கிறிஸ்ட் நகரில் உள்ள மசூதிகளில் கடந்த வாரம் தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்களை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு நடத்திய முக்கிய நபரான பிரெண்டன் டாரன்ட் என்ற அந்த தீவிரவாதி, துப்பாக்கி சூடு நடத்திய வீடியோவை நேரடியாக ஒளி பரப்பியுள்ளான். இந்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் தீவிரவாதி பதிவேற்றிய நேரலை வீடியோவை 200 பேர் பேஸ்புக்கில் பார்த்துள்ள நிலையில் வீடியோ பதிவேற்றப்பட்ட 29 நிமிடங்களில், 4,000 முறை மட்டுமே பேஸ்புக் பயனாளர்கள் பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் பேஸ்புக் பயனாளர் ஒருவர் அந்த கொடூர வீடியோ குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரையடுத்து உடனடியாக அந்த வீடியோவை நீக்கியதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், அழிப்பதற்கு முன்பே அந்த வீடியோவை பதிவிறக்கம் செய்த 8சன் (8chan) என்ற வலதுசாரி தீவிரவாத ஆதரவுக் குழு ஒன்று பிராக்சி தளங்கள் மூலமாக மீண்டும் அந்த வீடியோவை பதிவேற்றி பரப்பியதாகக் கூறியுள்ளது.
பேஸ்புக் நிறுவனம், தானியங்கி செயலிகள் மூலம் தடுத்த போது அதில் சிக்காமலிருக்க அந்த வீடியோவை வலதுசாரி தீவிரவாத ஆதரவுக் குழு வேறு விதமாக எடிட் செய்து மீண்டும் பதிவேற்றி பரப்பியதாகவும், தானியங்கி செயலி மூலம் எவ்வளவுதான் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் 24 மணி நேரத்தில் 15,00,000 முறை வன்முறை வீடியோ பார்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.